Monday, October 17, 2016

அரபு வசந்த பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்கள்


உரை: உஸ்தாத் காலித் மிஷ்அல்

பொதுத் தலைப்பு: 
அரபு வசந்த பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்களில் ஏற்பட்டு வரும் நிலைமாற்றங்கள் குறித்த அல்ஜஸீராவின் கருத்தரங்கு.

(அரபு வசந்தம் வெற்றிகரமாக முன் செல்வதற்கான சுபசோபனங்கள் கருத்தரங்கில் உரையாற்றியோர் மூலமாக பல கோணங்களிலும் முன்வைக்கப்பட்டன. எதேச்சாதிகாரத்தின் பிடியிலிருந்து அரபு வசந்தம் மீண்டு வரும்; அரபு வசந்தத்தில் ஒவ்வொரு அரசாக வீழ்ந்து கொண்டிருக்க, இங்கு விரைவாகவோ காலம் கணிந்தோ பலஸ்தீன் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய உம்மத் விரும்புகிறது. அது முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்ரா மேற்கொண்ட மகோன்னத பூமி. ஈஸா(அலை) பிறந்த பூமி. முதல் கிப்லா, மூன்றாவது புனிதஸ்தலம். இன்று அது அரபுலகிலும் இஸ்லாமிய உலகிலும் தீர்க்கப்பட வேண்டிய மையப் பிரச்சினை அது; முதன்மை விவகாரம் அது. அது ஒவ்வொரு இஸ்லாமிய மற்றும் உலகளவிலும் தாக்கம் செலுத்திகொண்டிருக்கிறது.

இப்புரட்சி என்பது நாட்கள், வாரங்கள், மாதங்களில் வெற்றிபெறக் கூடியது அல்ல; அத்தோடு இருக்கும் அரசுகளின் தலைகள் வீழ்வதோடு மாத்திரம் முடிந்துவிடுவதுமல்ல. இந்த அரபு வசந்தம் பிராந்திய, சர்வதேச ரீதியில் ஒன்றோடு ஒன்று தொடர்பான நலன்களுக்குள் சிக்கிய ஆழ்ந்த தேசங்களுடன் தொடர்புடையது இது. இங்கு எதிர்ப்புரட்சிகள் மாற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தோரிடம் கஷ்டத்தை, நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அதற்காக உழைப்போர் தமது நாடுகளில், பிராந்தியங்களில், சர்வதேசத்தில் தமக்கு வாய்க்கப்பெற்ற பலம், சாதனங்களின் துணை கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இங்கு இந்த புரட்சி அரசியல் ரீதியாக, சிந்தனா ரீதியாக, கருத்தியல் ரீதியாக பலஸ்தீன போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பேசப்படுகிறது. இதில் ஹமாஸ் போராட்டத்தின் மையமாக இருந்தது. பலஸ்தீன போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது மட்டுமே அரபு வசந்தத்தில் தோன்றிய எதிர்ப் புரட்சிகளின் நோக்காக இருந்தது எனலாம். அரபு வசந்தம் பலஸ்தீன போராட்டத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? ஹமாஸில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்ன? கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? போராட்டத்தின் மூலோபாயம், கஷ்ட-நஷ்டங்கள், பிழை விட்ட இடங்கள் என சிந்தனைகளில் ஏற்படுத்திக் கொண்ட மீளாய்வுகள், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் என்ன? அனைத்தும் இங்கு முன்வைக்கப்படுகிறது. முன்வைப்பவர் அறிமுகங்கள் ஏதும் அவசியமற்றவர்; ‘ஹமாஸ்’ இயக்கத்தின் அரசியல் பிரிவுத் பொறுப்பாளர் உஸ்தாத் காலித் மிஷ்அல் அவர்கள். அவரது உரையின் தமிழ் தழுவலாக ஓரளவு சுருக்கப்பட்டு இங்கு முன்வைக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ் நமது பணிகளைப் பொருந்திக் கொள்வானாக!)


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே… ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ஸல்) மற்றும நபிமார்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

கூடியிருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் முதற்கண் நன்றிகள். நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் தலைப்பு இஸ்லாமிய வாதிகள் மற்றவர்கள் என பலரும் கரிசனை காட்டக் கூடிய தலைப்பு.

இந்த இடத்துக்கு பேச அழைக்கப்பட்ட கணம், பெரும் சவால் மிகுந்த விடயமொன்றை எவ்வாறு பேசப்போகிறேன் என்ற கேள்வியுடன் இருந்தேன். எனது உரை எதிர்வரும் நாட்கள் குறித்து உங்களை திருப்திப்படுத்தவும் சுபசோபானங்களை முன்வைக்கவும் வேண்டும். உங்களது அறிவுகளைக் கண்ணியப்படுத்தவும் உம்மத்தை ஏமாற்றாமலும் உங்களுடைய விவகாரத்தில் உங்களது இயங்குதலில் எவ்வித பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும். அதோடு நீங்கள் இஸ்லாமிய நாடுகளோடும் இஸ்லாமியப் பரப்பில் உழைத்துக் கொண்டிருப்போருடனும் முரண்படுவதாக உங்களைக் காணவும் கூடாது.

எனவே அல்லாஹ் மீது தவக்குல் வைத்தவனாக நான் இவற்றை முன்வைத்து பேச விரும்புகிறேன். சரியானவற்றை சுருக்கமாகத் தர முயற்சிக்கிறேன்.

அரபு வசந்த பின்னணியில் இஸ்லாமிய இயக்கங்களிடத்தில் ஏற்பட்டு வந்த நிலைமாற்றங்கள்:

அரபு வசந்தத்தின் பின்ணணியில் நின்று இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய வாதிகளிடத்தில் ஏற்பட்டு வந்த நிலைமாற்றங்கள் குறித்து நோக்குவோமாயின், நாம் பலஸ்தீனிலே போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு. நாம் மட்டும் தான் ஒரே ஒரு அமைப்பல்ல. பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டத்தில் நாம் ஒரு முன்னுதாரணம். எமது முழு முதல் நோக்கம் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி நமது பூமியை மீட்டெடுப்பதுதான். ஆனால் ஹமாஸுக்கென்று ஒரு இஸ்லாமிய அரசியல் பக்கம் இருக்கின்றது.

ஒரு கட்டத்தில் நமக்கு அதிகாரப் பொறுப்பு வழங்கப்பட்டு நமது மக்களைப் போஷிப்பதற்கும், பாதுகாக்கவும், சீரமைக்கவும், நமது மக்களுக்குப் பணி செய்யவும் வாய்ப்பை நாம் தேர்ந்தெடுத்தோம். அப்போது நமது எதிர்ப்புப் போராட்டத்தை பாதுகாக்க அதனை நாம் வடிவமைத்தோம்.

இப்பின்னணியில் நான் இரு தலைப்புக்களில் பேசுவேன். 

ஒன்று, ஹமாஸ் எவ்வாறு அரபு வசந்தத்தை கையாண்டது என்பதும் பின் அது எதிர்ப் புரட்சிகளை எவ்வாறு கையாண்டது என்பதுமாகும். அதில் ஹமாஸ் செலுத்திய தாக்கம், ஹமாஸ் அடைந்த தாக்கம் என்பனவும் பேசப்படும்.

இரண்டாவது, அரபு வசந்தத்தில் இஸ்லாமியவாதிகளின் பாத்திரம் எவ்வாறிருந்தது என்பது குறித்த பார்வையையும் ஹமாஸ் பாலஸ்தீன மக்களின் விடயத்தில் அதனை எவ்வாறு கையாண்டது என்பதும் பேசப்படும்.

முதலாவது பகுதியைப் பொருத்தமட்டில்,

(1) அரபு வசந்த்தத்தின் தாக்கம் குறித்து நோக்கினால், எவ்வித தயக்கமுமின்றி நாம் தாக்கமடைந்தோம் எனக் கூறுவோம். யாரும் அதனால் தாக்கமுறவில்லை; ஒரு போதும் அரபு வசந்தத்தில் நாம் தாக்கம் அடையவில்லை; தாக்கம் செலுத்தவில்லை என்றெல்லாம் கூற முடியாது; கூறவும் மாட்டோம். அந்த புரட்சியில் பெரும் பெரும் அரசுகள் நாடுகள் எல்லாம் நிலை குலைந்து தடுமாறி நின்ற வேலை ஓர் இயக்கம் தாக்கம் அடையவில்லை என எவ்வாறு கூறுவது? அவ்வாறே ஹமாஸ் அதன் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியிலும் வித்தியாசமான விளைவுகளைக் கண்டது.

(2) 2006ல் நாம் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றோம். அதுவே சிலவேளை அரபு வசந்தத்துக்கு முன்னரே நாம் வைத்த எட்டுக்களாக இருந்திருக்கலாம். அதே நேரம் அதுவே எதிர்ப் புரட்சியொன்று தேவை என்பதை எதிரிகளுக்கு உணர்த்திய சிறு முன்னுதாரணமாகவும் அது இருந்திருக்க முடியும்.

(3) அடுத்து பலஸ்தீன மக்களும் அவர்களது போராட்டமும் ஹமாஸோ அல்லது பலஸ்தீன மக்களோ கூறாவிட்டாலும் நிச்சயமாக பிராந்தியத்தின் அரபு வசந்தத்தில் ஆழ்ந்த தாக்கத்தை நிகழ்த்தியது. இதனை நான் அரபுத் தலைநகரங்களுக்கு சென்ற போது அவதானித்தேன். இவ்விடயத்தில் நாம் பாலஸ்தீனிலே உள்ள அனைத்து போராடுபவர்களையும் நினைவுபடுத்துகிறேன். பாலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் என்பது ஹமாஸை விட மிகப் பெரிய ஒரு வட்டம். ஹமாஸ் அவர்களிலே முன்னணியில் உள்ள முக்கிய ஓர் அடையாளம்.

பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் இந்த உம்மத்துக்கு இரு வகைகளில் முன்னுதாரணத்தை வழங்குகின்றது. ஒன்று, ஆயுத எதிர்ப்பு ரீதியான முன்னுதாரணம். அடுத்தது மற்றது மக்கள் திரளின் முன்னுதாரணம். பலஸ்தீன குழந்தை நெஞ்சு நிமிர்த்தி யுத்தத் தாங்கிகளுக்கு முன்னால் நிற்கும் தைரியத்தை என்னவென்பது! இவை உம்மத்தினது கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட விடயம். இங்கே பெரும் அற்புத சக்தியொன்று இருக்கின்றது.

(4) அடுத்து நாம் அவதானிக்க வேண்டும். நாம் அரபுப் புரட்சிகளால் சாதகமாகவும் பாதகமாகவும் தாக்கமுற்றோம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நாம் பிராந்தியத்தில் இருக்கிறோம்; அரபு-இஸ்லாமிய, பிராந்திய, சர்வதேச ரீதியான விவகாரங்களில் நாம் தாக்கத்துக்கு உட்படுவோம் என்பது இயல்பானது. பொதுவாக எல்லா மக்களிடத்தேயும், பலஸ்தீன மக்களிடத்தில் குறிப்பாகவும் எதிர்ப்புணர்வு சிறப்பாக என்பது இருந்துகொண்டிருக்கிறது. அவ்வகையில் இந்த புரட்சி என்பது தன்னிலையானது. ஆக்கிரமிப்பைக் கடுமையாக எதிர்ப்பதுடன் தொடர்புடையது. நம்முடைய இந்த எதிர்ப்புப் போராட்டமானது பருவத்துக்குப் பருவம் கூடிக் குறைவதல்ல. நம்மை சூழவும் சிறப்பான சுழற்சிகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் பாதக சுழற்சிகள் நிகழ்ந்தாலும் நமது எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். சர்வதேச ரீதியான எவ்வகை மாற்றம் நிகழ்ந்த போதிலும் நாம் எமது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருப்ப்போம்

பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டமானது உத்வேகம் பெற்ற 1950கள் மற்றும் 60களில் கடினமான ஒரு கட்டத்திலே ஃபத்ஹ் உட்பட பல பலஸ்தீனிய இயக்கங்கள் எதிர்ப்ப்புப் போராட்டத்தை முன்கொண்டு சென்றன. பின்பு முதலாவது இன்திபாழா மக்கள் மயப்பட்டதாக வெடித்தது. 2000ம் ஆண்டில் இரண்டாம் இன்திபாழா, 2வது கேம்டேவிட் உடன்படிக்கையுடன் பலஸ்தீன் உள்ளும் புறமுமாக ஆக்கிரமிப்பினால் கிளர்ந்தெழுந்த மக்கள் மூலமாக வெடித்தது. ஒஸ்லோ உடன்படிக்கையோடு பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் முடிந்துவிடும் என எதிர்பார்த்தோருக்கு இது ஏமாற்றமளித்தது.

அதன் பின்பு தொடர்ந்த மூன்று போர்கள் காஸா பள்ளத்தாக்கின் மீது தொடுக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றுமே வெவ்வேறான காலப் பகுதிகளில் சிறந்த சூழலோ அல்லது பாதகமான சூழலோ எதிலும் நாம் போராடத் திறன்பெற்றவர்கள் என்ற செய்தியை உலகுக்கு சொன்னது.

2008/09 முதல் போர் தொடுக்கப்பட்ட போது நாம் எவ்வித உதவியும் இல்லாமலே எல்லாப் புறமும் எதிர்ப்புகளாக இருந்த காலப்பகுதியில் கடினத்துடன் எதிர்கொண்டோம்.

பின்பு 2012இல் இரண்டாவது யுத்தம் தொடுக்கப்பட்ட போது அரபு வசந்தம் அதன் ஆரம்பகட்ட சுபசோபனங்களுடன் நம்மருகே இருந்தது. எகிப்து நமக்கு முழுமையான ஆதரவை வழங்கியது.

அடுத்ததாக 2014 யுத்தம் வந்தது. அரபு வசந்தத்தின் எதிர்ப் புரட்சிகள் நிகழ்ந்த சூழல் அது. அப்போது பலரும் ‘ஹமாஸ் அதன் பழைய தோழமைகளை இழந்துவிட்டது; அது புதிய தோழமைகளை அடைந்துகொள்ளவில்லை’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனாலும் நாம் எமது போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.

இவை, அரசியல்-ஆயுத ரீதிகளாக ஆதரித்துப் பலப்படுத்துவதற்கு நம்மை சூழ ஆதரவாளர்கள் இருந்தபோதிலும் இல்லாத சூழ்நிலைகளிலும் பலஸ்தீன மக்கள் சாத்தியமற்றவைகளையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதைக் காட்டுகிறது.

அரபு வசந்தத்தை பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் எவ்வாறு கையாண்டது?

மிக இலகுவாக விளங்கக் கூடிய அமைப்பில் அரபு வசந்தம் நம்மை அடைந்தது. அது பல படித்தரங்களை கடந்து சென்றது. துருக்கியும் கத்தரும் நெருக்கமாக நின்று செயலாற்றின. அப்போது பல நடுநிலை நாடுகள் நம்மை ஆதரித்தன.

இதன் போது நாம் மாத்திரம் நின்று செயலாற்றவில்லை. நமது நட்புகளான பல தரப்பினரும் சந்தேகமின்றி நம்மைப் பலப்படுத்தினர். நாம் நடுநிலை அரபு நாடுகள் அனைத்துக்கும் நமது கதவுகளைத் திறந்து வைத்தோம். நாமும் பல வாயிற்படிகளுக்கு ஏறி, இறங்கினோம். சிலர் நமக்கு தம்முடைய வாயில்களைத் திறந்து கொடுத்தனர்; இன்னும் சிலர் கதவை மூடிக் கொண்டுவிட்டனர்; இன்னும் சிலரோ தயக்கத்துடன் நின்றனர்.

நாம் பலஸ்தீன பிரச்சினையை நம்முடைய பிரச்சினையாக மட்டுமல்லாமல். இந்த உம்மத்தின் பிரச்சினையாகப் விசுவாசிக்கிறோம். அதனை நமது அரபு நாடுகளுக்கிடையில் துண்டுகளாக்கி பிரித்து நோக்குபவர்களாக இருக்கவில்லை. பலஸ்தீன பிரச்சினை குறித்த இந்த உம்மத்தின் ஆர்வத்தினை நாம் அரபுத் தலைநகரங்களுக்கு சென்ற போது நன்கு அவதானித்தோம். நாம் அனைவருடனும் வேலை செய்ய விரும்புகிறோம். இவ்வாறு நாம் இக்காலப் பகுதியில் மக்களின் சிந்திப்பில் பாதிப்பு செலுத்தினோம்.

குறுகிய கால வெற்றிகளுடன் அரபு வசந்தம் வந்த போது பல மக்கள் தரப்புக்களும் திகைத்து நின்றன. பலஸ்தீன மக்களும் விரைவான மாற்றமொன்றை எதிர்பார்த்தனர். ஏனெனில் பலஸ்தீனர் ஆக்கிரமிப்பை விட்டும் சுதந்திரக் காற்றை விரைவிலேயே சுவாசிக்க விரும்புகின்றனர். அதற்கு இஸ்லாமிய உம்மத் உதவும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது.

சில நாடுகள் அரபு வசந்தத்தை தயக்கத்தோடு நோக்கின. அரபு வசந்தம் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், சீர்திருத்தங்களை கலக்கத்துடன் நோக்கின. ஏனெனில் அரசுகளும் அதிகார மையங்களும் வாரிசு ரீதியான ஆட்சிக் கைமாறல்களுக்கு முற்றுப்புள்ளி இடப்படும் என்ற அச்சம் இருக்கையில் சீர்திருத்தங்கள், மாற்றங்களை ஏற்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

2011 அரபு வசந்தத்துடன் நிறைய புதிய காட்சிகள் தோன்றின. எதிர்பார்ப்புகள், சுபசோபனங்களுடன் நாம் அவற்றைப் பார்த்தோம். பல அமைப்புக்கள், தலைமைகள் நீதி, ஜனநாயக அடையாளங்களுடன் வந்தன. நாமும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம். நாம் சுபமாகவே அவற்றை நோக்கியதுடன் அரசியல் ரீதியில் பயனடைந்தோம். நமது எதிர்ப்புப் போராட்டத்துக்கு பலத்த ஆதரவைப் பெற்றோம்.

எகிப்து, துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் மூலம் சிறந்த தலைமை வழங்கப்பட்டது. 2012 போரின் போது அரபு லீக் செயலாளர் வருகை தந்தார்; எகிப்து பிரதமர் காஸாவுக்கு வருகை தந்தார். எகிப்து அரபுலகின் மிகப் பெரும் நாடு; துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் வருகை தந்தார்.

அப்போது எல்லோரும் கேட்டது என்னவெனில் பலஸ்தீன எதிர்ப்பு போராளிகள் இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு என்ன நிபந்தனைகளை இடுகின்றனர் என்பதைத் தான்… அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலை காப்பாற்றுவதற்கென அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளின்டன் கூட வந்துசென்றார். அவர்கள் மீதுதான் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது; நம்மீது அல்ல; இதுவொரு பெரிய மாற்றம்.

அப்போது இலக்குகளை அடைந்துகொள்வதில் அந்த குறுகிய கால போர், பெரு வெற்றிபெற்றது. முழு அரபு-இஸ்லாமிய சமூகங்களும் ஒன்றிணைந்து நிற்கும் போது பலஸ்தீன எதிர்ப்புப் போராட்டம் எந்த வடிவம் பெற்று இருக்கும் என்பதற்கான சிறு உதாரணமாக அது காணப்பட்டது.

அதன்போது நமது எதிர்ப்பு நாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் சிலரையும் நாம் அணுகிப் பார்த்தோம். அதாவது, அரபுலகில் நிகழ்ந்த மாற்றங்களை அந்த இடங்களில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவர்களை நமது புறத்திலிருந்து ஆவலுடனும் நம்பிக்கையுடனும் அணுகினோம்.

அங்கும் மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் இருந்தன. அதுபற்றி அங்கிருந்த சில புரட்சிகர ஆளுமைகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினோம். இதுவெல்லாம் வரலாற்றில் நினைவுபடுத்தப்படப்போகும் விடயங்கள். அவ்வாறு அங்கு மாற்றத்துக்கான விசை சரியான, அறிவுபூர்வமான முறையில் கொடுக்கப்பட்டிருந்தால் அங்குள்ள மக்களும் அந்த மாற்றங்களை ஏற்றிருப்பார்கள்.

இவற்றுடன், இச்சந்தர்ப்பங்களில் நாம் நடுநிலை நாடுகளுடனும் நமது வாயில்களைத் திறந்து வைத்திருந்தோம். நாம் அவர்களின் உதவி தேவையற்றது போன்று பெரிய எண்ணம் வைக்காது புதிய புதிய வாயில்களை அங்கு திறந்தோம்; அவர்களும் பல புதிய வாயில்களைத் திறந்தனர்.

அங்கும் கலந்துரையாடல்களை நிகழ்த்தினோம். அந்த நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கும் நடைமுறையை சரியாக விளங்கி, கணித்து செயல்பட அறிவுறுத்தினோம். இஸ்லாமிய உம்மத்துக்கு பெரும் அறிவுறுத்தல்களை வழங்கினோம்.

அரபு வசந்தத்தின் நற்செய்திகள் வந்து கொண்டிருந்த இந்தக் காலப் பிரிவில், நாம் எம்மை நுணுக்கமாக வரையறை செய்தோம். அவை நமது இஜ்திஹாத். அதன் முக்கிய நான்கு அம்சங்கள்:

(1) நாம் பலஸ்தீன விடுதலைப் போராட்ட இயக்கம். பலஸ்தீனை அதனை ஆக்கிரமித்திருப்போரிடம் இருந்து மீட்கப் போராடுகிறோம்.

(2) பலஸ்தீன விவகாரத்தை, குத்ஸ் விடயத்தை இஸ்லாமிய உம்மத்தின் முதன்மைப் பிரச்சினையாக உம்மத்திடம் முன்வைத்து அதனைப் பேணுதல். இதனை அயலகப் பிரச்சினைகளுக்குள் உள்நுழைக்காதிருத்தல்.

(3)அடுத்து பிராந்தியத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்குள் உள்நுழையாமல் இருக்கும் அதே நேரம் அவ்விடயம் குறித்த பொறுப்பான, பண்பான நிலைப்பாடொன்றை அடிப்படையில் கொண்டிருப்போம். மக்களுடன் அவர்களது உரிமைக்காக இருப்போம்; அவர்களது வேதனைகளை அறிந்தவர்களாக இருப்போம். உம்மத்தின் ஒற்றுமையில், நலன்களில் கவனத்துடன் இருப்போம்.

இவை இயல்பானவை; இவை ஹமாஸினதும் பலஸ்தீன மக்களினதும் நிலைப்பபாடுகள்; ஹமாஸ் ஒரு மக்கள் இயக்கம்; அது மக்களது எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும்; நாம் ஒரு நீதியான விவகாரத்துக்காகப் போராடுகின்றவர்கள். நாம் அநியாயத்துடன் கைகோர்க்கக் கூடாது. சிலர் இதன் போது மக்களுக்கு எதிராக இருக்கும் படி கோரிய போது நாம் மறுத்தோம்.

(4) அடுத்து பிராந்தியத்தின் நாடுகள் மற்றும் சக்திகளோடு அரசியல் ராஜதந்திர உறவுகளைப் பேணும் போது, நமது நலன்கள் மற்றும் அத்தியாவசியங்களுக்கிடையே சமநிலை பேண முயற்சிப்போம். அதன் போது நலன்களுடன் நமது அடிப்படைகள் முரண்படும் போது நமது அடிப்படை பண்பாட்டுப் பெறுமானங்கள் மீதே திரும்புவோம். சிலர் தமது மக்களுக்கெதிராக நம்மை நிற்குமாறு கோரிய பொழுதில் நாம் நமது நிலைப்பாட்டை எடுத்து, இவற்றுக்கான விலைகளை கடந்த காலங்களில் செலுத்தியுமிருக்கிறோம். அவை குறித்து கடந்த காலங்களில் ஆழமான வாதங்கள் பல எழுந்தும் உள்ளன.

எதிர்ப் புரட்சி காலப் பகுதிகள்:

அரபு வசந்தம் குறித்த பகுதிக்குப் பின்னால் நாம் எதிர்ப் புரட்சிகள் இடம்பெற்ற காலப் பிரிவுகளுக்குள் நுழைவோம். பெரும் மாற்றங்கள் குவிந்த காலப் பகுதியாக இது அமைந்தது. நாடுகள் பெரும் கலேபரமுற்றன. ஜனநாயகம் குப்புறக் கவிழ்க்கப்பட்டது. இதன் போது அரபு வசந்தத்துடன் தொடர்புறாத சில பிராந்திய நாடுகளின் ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களை இன்னும் கஷ்டத்திலே வீழ்த்தும் முன்னெடுப்புக்கள் இவை.

இது நிகழ்ந்த காலப் பிரிவுகளில் நாம் எம்மை மிகுந்த அபாயத்துக்குள் சிக்கியிருப்பதை கண்டுகொண்டோம். பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரமின்மையானது கொலை, கொள்ளை, இடப்பெயர்வு என இரத்தம் தோய்க்கப்பட்டிருந்தது. ஒரு வகை குழுவாதம் மேலோங்க செய்யப்பட்டிருந்தது. இந்த குழுவாதத்தின் அடியாக சண்டைகளும் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. அது உண்மையில் மக்கள் சார்ந்த குழுவாதங்கள் அல்ல. மக்கள் இதன் போது தம் பாட்டிலேயே இருந்தனர். இந்த குழுவாதங்களைத் தோற்றுவித்தது சில அரசுகள், ததத்தமது நலன்களை நாடிய சில சக்திகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களுமாகும். அந்தக் குழுக்களுக்கு அரசியல் பிரக்ஞ்சைகளுமில்லை; இஸ்லாம் குறித்த சரியான புரிதலும் இல்லை.

இக்காலப் பகுதிகளில் முன்னர் எப்போதும் இல்லாதவாறு சில தீவிரவாதக் குழுக்கள் வெளிப்பட்டு வந்ததை நாம் கண்டோம். இஸ்லாத்தில் ஆழ்ந்த அறிவு பெறாத அத்தகையவர்களுக்குப் பின்புலமாக கடும்போக்கும் அறியாமையும் இருந்தது; இஸ்லாத்துக்கும் அரபுக்களுக்கும் தீய பெயரை உருவாக்கும் பாதகமான முயற்சிகளையே அவர்கள் கொண்டிருந்தனர். இவர்களால் ஜனநாயகத்தின் மூலம் ஏற்பட்டு வந்த மக்களுக்கான மாற்றங்களையும் அவர்கள் ஒழிப்பவர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு பிரிவினரின் அஜண்டாக்களுக்குள் சிக்கியிருந்ததுடன் பிராந்தியத்தின் முதன்மைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் சீர்குலைவுகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன் பின்னரான காலப் பகுதியில் பல வெளிச் சக்திகள் பிராந்தியத்துக்குள் நுழைவதை நாம் நேரடியாகக் கண்டோம். அவ்வேளை மக்களை துண்டு துண்டாகப் பிரித்து விடும் திட்டங்கள் பரவலாக அரங்கேற்றப்பட்டன. மக்கள் இவ்வகைக் குழுப் போர்களுக்குள் மூழ்கியிருக்கையில் இஸ்ரேலுக்கு சாதகமான நிலைகள் பல கோணங்களில் மீண்டும் தோன்றின. எதிரியாகக் கையாளப்படவேண்டிய நெடடன்யாஹு அரபு நாடுகளுடன் தமக்கிருக்கும் நேரடி, மறைமுகத் தொடர்புகள் குறித்து பெருமைப்பட்டுக் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது நாம் தெளிவாகக் கூறினோம், உம்மத் பல பிரச்சினைகளுக்குள் சிக்கி நிற்கும் போது இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுவது புத்திசாதுரியமானதல்ல. அப்போது பலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் அபாயம் ஒன்றும் குறைந்திருக்கவும் இல்லை; மாறாக அரபு வசந்தத்துக்கே எதிராக இஸ்ரேலின் அபாய நகர்வுகள் அதிகரித்துவிட்டிருந்தன; உம்மத்துக்கு எதிராக அது செயற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த உம்மத் அதன் சுதந்திரத்தைப் பெறுவதில் தாமதிக்க செய்வதில் இஸ்ரேலுக்கு மிகப் பெரும் பங்கிருக்கின்றது. இதே வேலையை அரபு அரசுகளும் தம்முடைய மக்களது நாட்டங்களைப் புதைக்க முற்படும்போது செய்துகொண்டிருக்கின்றன; அவைஅரசியலையும் ராஜதந்திரத்தையும் குறுக்கி நோக்குகின்றன; ஒருவருக்கொருவர் இஸ்ரேலுக்கு பணிவிடை செய்யும் நிலையே இருந்தது. நிலைமைகள் இவ்வாறு இஸ்ரேலுக்கு ஆதரவாக முழுமையாக மாற்றப்பட்டன. பலஸ்தீன் ஒரு கட்டுக்குள் முடக்கப்படப் பார்த்தது.

இந்த சந்தர்ப்பங்களை ஹமாஸ் கையாண்டது எவ்வாறு?

நிலைமைகளைக் கையாள்வதில் குழப்பம் நிலவிய போதிலும், முன்னர் தொடர்ந்தேர்ச்சியாகப் பெற்று வந்த வெற்றிகள் போலவே அடுத்து வரப்போகும் கட்டங்களிலும் ஹமாஸ் வெற்றிபெறுவது குறித்த கேள்வி எழும்பியது. ஆம்… ஹமாஸ் வெற்றிபெறும் என்பதை சொல்லிவைக்கிறோம். அப்போது நாம் கைக்கொண்ட சில முறைமைகளை இவ்வாறு கூறலாம்:

(1) நாம் எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தினோம். எதிர்ப்புக்களை எதிர்கொள்வதில், சாதிப்பதில் நமது இயலுமை எவ்வாறு உள்ளது; எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை நாம் மீள்பரிசீலனை செய்தோம். மிகக் கடினமான காலங்களில் நாம் எவ்வாறு செயற்படுவோம்; அவற்றை எவ்வாறு முகங்கோடுப்போம் என்பதையும் மீள்பரிசீலித்தோம். எவரும் உதவி வழங்க முடியாத கடந்த ‘அல்அஸ்ஃப் அல்மஃகூல்’ யுத்த நடவடிக்கையின் போது நாம் பன்மடங்கான ஆயுத பலத்தினைப் பெற்றிருந்தோம். பலஸ்தீனம் சாத்தியமற்றவற்றையும் கூட சாதித்துக் காட்டும் பலம்கொண்டது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

(2) அடுத்து பாலஸ்தீன ஒருமைப்பாட்டைப் பேணுவதில் இகாலப் பகுதியில் ஹமாஸ் கூடிய கவனம் செலுத்தியது. இதன்போது ஹமாஸும் இஸ்லாமியவாதிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் ஜனநாயகம் பேணப்பட ஹமாஸ் பல விட்டுக் கொடுப்புக்களை செய்தது. நமது அரசியல்துறைப் பிரதிப் பொறுப்பாளர் இஸ்மாயில் ஹனிய்யா பிரதமர் பொறுப்பை விட்டும் முன்னாள் பிரதமராக மாறினார். இதன்போது தேர்தலில் நம்மை மிகைக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டு நம்மை ஆலோசிக்காமலே தேர்தல் நேரம் குறிக்கப்பட்டது. பின்னர் நாம் தேர்தலில் பங்கேற்கும் தீர்மானத்தை எடுத்ததும் தேர்தலைப் பிற்போட்டனர்.

(3) நாம் குறித்த நிகழ்வுகளால் பாதக விளைவுகளை அனுபவித்த போதிலும், அவற்றின் மூலம் அதிகபட்சம் படிப்பினைகளைப் பெற முயற்சித்தோம். ஏனெனில் சில பாதக விளைவுகள் நம்மிடமிருந்தே உருவாகியிருந்தன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்வது நமது கடமையாகும்.

(4) நான்காவதாக நாம் பிராந்தியத்தின் ஏனைய முறுகல்களுக்குள் நுழையாமல் இருக்கும் அரசியலைத் தொடர்ந்து பேணினோம். அத்தோடு தோற்றுவிக்கப்பட்டிருந்த குழுவாதங்களை இழிவளவாக்குவதற்கு தொடர்ந்தும் முயன்றுகொண்டே இருந்தோம். நமது இஸ்லாமிய உம்மத்துக்கு இவற்றுள் வீழ்ந்துவிடாதிருக்க தொடர்ந்தும் உபதேசித்துக்கொண்டே இருந்தோம். இந்த விவகாரங்களில் முன்னெப்போதுமில்லாத அளவு வெளித்தலையீடுகளையும் நாம் சுட்டிக் காட்டினோம். அதில் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிரியாவின் வீரமைந்தர்களே.

(5) நாம் நமது அரசியல் முன்னெடுப்புக்களை வெளிப்படையோடும் நுணுக்கமாகவும் எச்சரிக்கையுடனும் நலன்களை அடைந்து – தீங்குகளை அப்புறப்படுத்தலையும் இணைத்து செய்துவந்தோம். அதில் நாம் எமது அடிப்படை பண்பாடுகளைத் தொடர்ந்தும் எப்போதும் போல் பேணி வந்தோம். நாம் நமது உம்மத்தின் மையப் பிரச்சினையாக பலஸ்தீனப் பிரச்சினையை நோக்க வேண்டும்; எல்லோருக்குமான அபாயம் இஸ்ரேல் என்பதை மக்களிடம் கொண்டுசெல்லல் என்ற ரீதியில் செயலாற்றினோம்.

அரபு வசந்தத்தை இஸ்லாமியவாதிகள் கையாண்ட விதம் குறித்து:

இப்பகுதி குறித்தும் எவ்வித அழுத்தமும் எனது பார்வைகளை முன்வைக்கிறேன். இஸ்லாமியவாதிகள் ஜனநாயகம் மீது நம்பிக்கைகொண்டுள்ள; பரீட்சித்தும் பார்க்கின்ற நடுநிலையான பாதையில் செல்லக் கூடிய தரப்பினர்கள் ஆவர். அரபுலகில் இஸ்லாமியவாதிகள், இஸ்லாமியவாதிகள் அல்லாதவர்களின் அரசியல் குறித்து நான் நன்கறிந்துள்ளேன். அவர்களில் இஸ்லாமியவதிகளே பல இழப்புக்களை சந்தித்த போதிலும் திறன் மிக்க இயங்குதல் கொண்ட, ஜனநாயகம் குறித்து நன்கு அனுபவமுடையவர்களாவர். அவர்களே தம்மில் திறனோடு ஜனநாயகத்தை பரீட்சித்தவர்கள்; பல தியாகங்களோடும் இழப்புக்களோடும் சில தவறுகள் இழைத்திருந்த போதிலும் அதில் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள்.

அடுத்து, இங்குள்ள கேள்வி இஸ்லாமியவாதிகள் ஜனானாயகத்துடன் இருக்கிறார்களா! இல்லையா! என்பதல்ல. மாறாக இஸ்லாமியவாதிகள் எவ்வாறு தொடர்ந்தும் ஜனநாயகத்தைப் பற்றிக்கொண்டு, அதன் விளைவுகளை திருப்தியுடன் நோக்கியவர்களாக இருக்கப் போகிறார்கள்? பெரும்பான்மையொன்றைப் பெற்ற போதிலும் எதிரணிகள் புறமிருந்து வரும் எதிர்ப்புக்கள், நம்பிக்கையீனங்கள், அதிருப்திகளுக்கு மத்தியில் எவ்வாறு தொடர்த்ந்திருக்கப் போகிறார்கள் என்பது சவால்மிக்கதாகும். இஸ்லாமியப் பரப்பில் ஒரு பகுதியான நாம் கூட இதனை ஹமாஸில் பிரயோகித்துப் பார்த்திருக்கிறோம். இதனை அடிப்படையில் ஓர் எதிர்ப்பியக்கம் என்பதைப் பேணிய நிலையிலேயே செய்தோம்.

இங்கு இஸ்லாமியவாதிகளோ அல்லது இஸ்லாமியவாதிகள் அல்லாத தேசியவாதிகள், இனத்துவப் பார்வையுடையவர்கள் போன்றோரை நிர்ப்பந்திக்கக் கூடிய பல தூண்டல் காரணிகள் உள்ளன. இங்கு எவரும் ஜனநாயகம் மூலமாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு கடும் சோதனைகளுக்கு மத்தியில் தமது உள்நாட்டு, பிராந்திய, உலகளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பலவீனங்கள் இலகுவாக வெளிப்பட்டுவிடும். அதிகரித்த விமர்சனங்கள் சிறிய பாதகங்களையும் வேற்படுத்திக் காட்டிவிடும். இங்கு இஸ்லாமியவாதிகள் தம் மீதான ஏனையோரின் விமர்சனங்களை ஏற்க வேண்டும்; ஏனெனில் அவர்கள் தற்போது பொதுவெளிக்கு வந்துவிட்டார்கள். இஸ்லாமியவாதிகள் அல்லாதோருக்கும் அவர்களது விமர்சனங்களை முன்வைக்க கண்ணியமான இடமுண்டு; அவர்கள் அதிலே வரம்புமீறிச் சென்றுவிடவும் கூடாது.

இங்கு அரபு வசந்தத்தை இஸ்லாமியவாதிகள் கையாண்ட விதம் குறித்து நோக்குகையில் இரண்டு தவறுகள் காணப்படுகின்றன:

(1) அரபுக்களின் சமகால நிலை மற்றும் இதன்போது பாதகமளிக்கக் கூடிய சக்திகளைக் கணிப்பதில் மிகைப்படுத்தி நோக்கிவிட்டார்கள். இது குறைந்த அனுபவம், நுணுக்கமான தகவல்கள் இன்மை, அநேக சந்தர்ப்பங்களில் ஏனையோர் விரித்த வளைகளுக்குள் விழுந்திருந்தமை, தமது பலம் குறித்த மிகையான-பிழையான எண்ணவோட்டத்தைக் கொண்டிருந்தமை, தம்முடைய பலம் மிக்க வலைப்பின்னல், மக்கள் பலம், ஆதரவு மட்டம், தாம் பெரும்பான்மையினர் என்ற எண்ணம் போன்றவைகளை இஸ்லாமியவாதிகள் மிகை மதிப்பீட்டுடன் நோக்கினர். இவையே எதிர்ப்புரட்சிகளை அவர்களால் கையாள முடியாது போனமைக்கும் சர்வதேச ஆதரவுகளைப் பெற முடியாமைக்கும் காரணிகளாகும்.

(2) இரண்டாவதாக ஏனைய தரப்பினர்களுடன் உரையாடி பணியாற்றுவதில் அவர்கள் விட்ட தவறுகளாகும்; இஸ்லாமியவாதிகள் பரீட்சார்த்த செயல்பாடுகளில் தங்கியிருந்தனர். பெரும்பான்மையைப் பெற்றிருத்தல் என்பது முக்கியமானது; ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. அதாவது அரசியல் தீர்மானங்களை எடுக்கும் போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்புக்களுடனும் உரையாடி தனிமைப்பட்டுப் போய்விடாமல் இருக்க வேண்டும்; நோக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் போது பல தரப்பினரும் பங்கேற்பதை எதிர்க்காது இணைத்து செல்ல வேண்டும். இது விடயத்தில் நாம் தவறு விட்டிருக்கிறோம். 2006 இல் அனைத்து தரப்ப்பினரை விடவும் மிகைத்து நாம் வென்ற போது தனித்து ஆட்சி அமைத்தோம். நாம் நமது பலம் குறித்து அதிக மதிப்பீடும், பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கிறோம் என்ற எண்ணமும் நம்மை பல தரப்பினருடன் உடன்பாடின்றி பயணிக்க செய்தது. நாம் அனைத்துத் தரப்புக்களுக்கும் நாம் மட்டும் மாற்றீடு என்ற நிலைப்பாட்டில் இருப்பது தவறானது என்பதைக் கண்டறிந்து கொண்டேன்.

இதனை சுருக்கமாக நான் ஒரு சம்பவத்தினூடாகக் கூறுகிறேன். ஒருமுறை, ஃபத்ஹ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் நம்மை பேச்சுவார்த்தைக்கென சந்திக்க வந்திருந்தார். அப்போது நமது தலைமையகம் சிரியாவில் இருந்தது. ஃபத்ஹ்க்கும் நமக்கும் இடையிலான வேறுபாடு தெரிந்த விடயமே. நாம் அதன்போது அவரிடம் கூறினோம் “யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்! நமது உரிமைகளில் நீங்கள் தவறிவிட்டீர்கள்; உங்களது உரிமைகளில் நாம் தவறிவிட்டோம். நாம் நமது தவறு எதுவெனில், ஃபத்ஹ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது; இனி நாமே மாற்றீடு என நாம் நினைத்த போது தவறிழைத்தோம். சமூக மட்டத்தில் செயற்படுவதே அதிக வினைத்திறன் தரக் கூடியது என்பதை நாம் அறியவில்லை. நீங்கள் தவறிழைத்தது, பலஸ்தீன களத்தில் புதிய தரப்பாக ஹமாஸ் செயல்பட வருவதை அங்கீகரிக்காத போதாகும்; ஹமாஸ் உண்மையில் செயலாற்றுவதற்கான அனைத்து சக்திகளையும் கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஒரு புதிய பிரவாகத்துடன் வருகிறது. அது உங்களோடு பங்களித்துப் பயணிக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவைல்லை.”

நாம் பங்கேற்பு என்ற விடயத்தையே முற்படுத்தி செயலாற்ற வேண்டும்; மாற்றீடு என்பதை அல்ல. உண்மையில் நாம் பங்கேற்று உடன்பாட்டுடனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் அனைவரும் பங்கேற்றுப் பொறுப்புக்களை சுமந்து பயணிக்கின்ற அமைப்பைக் கொண்ட அரசியல் பண்பாடு கொண்ட நிறுவனங்களை ஒவ்வொரு ஊரிலும்/நாட்டிலும் அமைப்பது நம்முடைய காலக் கட்டாயமாகும்; அதோடு அரசியல் ரீதியிலும் போராட்ட ஒழுங்கிலும் நாம் உடன்பாட்டோடு பயணிக்க வேண்டும்; அதற்கென உடன்பாடாக பயணிக்கக் கூடிய செயற்தளங்களை இனங்கண்டு செயற்படுவதற்கான பொறிமுறைகளையும் உருவாக்கவேண்டும்.

ஒரு முறை பலஸ்தீன செயற்பரப்பில் பணியாற்றுகின்ற ஒருவர் “அரசியல் தீர்மானங்கள் எடுப்பதில் நீங்கள் தனித்து செயற்படுவீர்களா?” எனக் கேட்ட போது, “இல்லை. நீங்களும் கூட அவ்வாறு செயற்படக் கூடாது” என்றேன். அரசியல், போராட்டம், தேசியம் தொடர்பான விவகாரங்களில் முடிவுகள் எடுப்பது இவ்வாறே இருக்கவேண்டும். இவற்றை 2006 இலிருந்து நாம் பேசிய போதும், துரதிர்ஷ்டவசமாக நடைமுறைக்கு வரவில்லை.

மேற்கூறிய நடைமுறைகளை ஹமாஸ் விசுவாசிக்கிறது. மேலும், ஹமாஸ் தன்னை மீள்பரிசீலனை செய்துகொண்டே இருக்கிறது என்பதைக் கூறிக் கொள்கிறோம். அது தவறுகளிலும் வீழ்ந்துள்ளது என்பதை ஏற்கிறோம்.

அது தனது மக்களின் சுபீட்சத்துக்காக, போராட்டத்தின் வெற்றிக்காக அது தொடர்ந்தும் செயற்படுகிறது. முற்றுகையை உடைப்பதற்கு போராடியுள்ளது; முற்றுகைக்குட்பட்ட நிலையில் அது மூன்று போர்களை எதிர்கொண்டது; முற்றுகைக்குட்பட்ட நிலையிலேயே அது பல பரீட்சார்த்த முயற்சிகளை செய்துள்ளது; முற்றுகைக்குட்பட்ட நிலையிலேயே அது தனது ஆயுத திறன்களை விருத்தி செய்திருக்கிறது. பல புதிய கண்டுபிடிப்புக்களையும் செய்துள்ளது; மக்களுடனேயே எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளது.

மிகக் கடினமான காலப் பிரிவில் இன்திஃபாழா துவங்கிய போதில் அல்அக்ஸா, அல்குத்ஸுக்குள் இருந்து போராடும் ஆண்-பெண் முராபித்கள் மிகக் குறைந்தளவானோரே இருந்தனர். அதன்போதே அரபு-இஸ்லாமிய சமூகங்களின் பொறுப்பான அல்அக்ஸாவைத் துண்டாடும் நடவடிக்கையை அவர்கள் தடுத்திருக்கின்றனர்.

நாம், நம்முடைய தவறுகளை சரிப்படுத்திக் கொள்ள அல்குர்ஆன் கூறும் செயல்திட்டத்தையே பின்பற்றினோம். எமது ரப் அல்குர்ஆனில் உஹத் யுத்த தோல்வியின் போது ஸூரத்து ஆல இம்ரானில் குறிப்பிடுகிறான்:

“இன்னும் உங்களுக்கு ஒரு துன்பம் (உஹதில்) வந்த போது, நீங்கள் அவர்களுக்கு (பத்ரில்) இதுபோன்று இரு மடங்கு துன்பம் உண்டாக்கியிருந்த போதிலும், ‘இது எப்படி வந்தது?’ எனக் கூறுகிறீர்கள். (நபியே!) இது உங்களிடமிருந்து தான் எனக் கூறுவீராக!” (ஆல இம்ரான் :165)

“உங்களிடமிருந்துதான் எனக் கூறுவீராக!” என அவன் குறிப்பிடுகிறான். இது பௌதிக ரீதியான தயார்படுத்தல்கள், காரணிகளை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிடாது. அவற்றுக்கு நமது முயற்சிகளே தேவை.

இறுதியாக… இக்காலப் பிரிவில் நாம் எம்மில் நமது நிலைமைகள் குறித்து மிகச் சரியாக மதிப்பிடுவதற்கான தேவை இருப்பதைக் கண்டோம்; வரக் கூடிய காலப் பகுதிகளில் நம்மை இன்னும் விருத்தியாக்க வேண்டும்; அது சிந்தனா ரீதியான விருத்தி, அரசியல் ரீதியான விருத்தி, வலைப்பின்னல் ரீதியான விருத்தி ஆக இருக்க வேண்டும். இன்னும் மாற்றம், வெற்றி, விருத்து குறித்த எனது ஆவலின்படி கூறுகிறேன். ஏனைய தரப்புக்களின் அனுபவங்களையும் பெற்று வெற்றியை எவ்வாறு தொடர்ந்து தக்கவைப்பது, வழிகளைப் புதுப்பித்து விருத்தி செய்வது குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டும். ஆனால் சிந்தனாரீதியாக உங்களது அடிப்படையையும் அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது. அடுத்து ஹமாஸுக்கு பிராந்திய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்புகள் உள்ளன. ஆனால் நாம் நான்காம் தரப்பொன்றின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து போய்விடுவதில்லை. இன்னொரு தரப்பின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசியல் பங்களிப்பை மட்டுமே செய்வது வழியல்ல. உங்களது நிபந்தனையையும் சொல்லுங்கள். இதற்கு நீங்கள் பலமுள்ளவராக இருக்க வேண்டும்; அத்தோடு உங்களது அரசியல் பார்வை எப்போதும் விழித்திருக்க வேண்டும்.

அனைவருக்கும் நன்றிகள்… வஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

Thursday, October 6, 2016

கர்பலா - வரலாறு புரண்ட கதை

கர்பலா - வரலாறு புரண்ட கதை

நபிகளாரின் பேரன் ஹுஸைன் இப்னு அலி (ரழி) எதன் பொருட்டு உமைய்யப் பேரரசை பகைத்துக் கொண்டார்? எதன் பொருட்டு தன்னுடைய குடும்பத்தினரையும் உயிராபத்துக்கள் கொண்ட பணியில் ஈடுபட வைத்தார்? உண்மையில் தன்னால் உமைய்யா பேரரசை வீழ்த்த முடியும் என்று நினைத்திருப்பாரா? தனிமனிதர்களை விட சமூக மாற்றத்தின் இயங்கியல் பிரமாண்டமானது என்று நபிகளாரின் பேரரும், கூர்மதி படைத்த நபித் தோழருமான ஹுஸைன் (ரழி) அறியாமல் இருந்திருப்பார் என்று கருத முடியுமா?

நபிகளாரின் மறைவுக்கு பிறகு இஸ்லாத்தின் சமூக திட்டத்தை நேர்வழி நடந்த கலீபாக்கள் மிகவும் ஈடுபாட்டுடன் கொண்டு சென்றனர். ஆனால் மூன்றாவது கலீபாவான உஸ்மான் இப்னு அப்பான் (ரழி) அவர்களின் இறுதித் தறுவாய்களில் இந்த சமூகத் திட்டத்திற்கான முனைப்புகள் மங்கத் தொடங்கி அலி இப்னு அபூதாலிப் (ரழி) இன் காலத்தில் கிலாபா ஆட்சி முஆவியாவின் தலைமையில் டமஸ்கஸிலும், அலியின் தலைமையில் கூபாவிலுமாக இரண்டாக உடைந்தது. பிற்பாடு நபிகளாரின் மூத்த பேரன் ஹஸன் (ரழி) அவர்கள் தன்னுடைய கிலாபா பதவியை முஆவியாவுக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மீண்டும் கிலாபா ஓரே தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தது. 

ஆனால் முஆவியா தனக்கு பிறகு ஷுரா எனப்படும் ஆலோசனை மன்றத்தின் மூலமே அடுத்த ஆட்சியாளரை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஹஸன் இப்னு அலி இட்டிருந்தார். ஆனால் முஆவியா இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. தன்னுடைய மகன் யஸீதை தனக்குப் பிறகான ஆட்சியாளர் ஆக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட முஆவியா அதனை பலப்பிரயோகத்தின் அடிப்படையில் சாதித்துக் கொண்டார். நபிகளாரின் போதனைகளும் புனித அல் குர்ஆனும் வலியுறுத்தல் செய்த ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை செயலிழந்து போனது. இடைப்பட்ட காலத்தில் ஹஸன் (ரழி) அவர்களும் மறைந்தார். சில வலுவற்ற அறிவுப்புகளின் படி ஹஸன் (ரழி) நஞ்சூட்டப்பட்டே மரணித்தார்.

மெளலானா மெளதூதி கூறுவது போல ஹுஸைன் (ரழி) நேர்வழி நடந்த கலீபாக்களின் நடைமுறையில் இருந்து யஸீதின் தலைமைத்துவ தெரிவு விலகி நின்றதே அவர் உமைய்யா பேரரசை எதிர்த்தமைக்கான காரணம். ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட நுணுக்கமான கட்டமைப்பு மாற்றத்தை ஹுஸைன் (ரழி) திறம்பட முன்னுணர்ந்து கொண்டார். இந்த மாற்றம் ஓர் வக்கிரமான மாற்றம் என்பதையும் முஸ்லிம் சமூகத்தினை அது மீளவே முடியாத சகதிக்குள் தள்ளி விடும் என்பதையும் தன்னுடைய பிரமிக்கத்தக்க அறிவாற்றலுடன் ஹுஸைன் தீர்க்கதரிதனத்துடன் கணித்தார். 

இதுவே ஹுஸைன் (ரழி) இனை போராட்டக் களத்தை நோக்கி உந்தியது. தன்னுடைய மகத்துவம் பொருந்திய பாட்டனாரை அனைத்து வகையிலும் நேசித்து பின்துயர்ந்த உன்னதமான பேரன் அவர். உலக வரலாற்றில் யாருக்குமே கிடைத்திராத பாட்டனாரான இறைத்தூதர் முஹ‌ம்ம‌த் (ஸல்) அவர்களின் சமூக திட்டங்கள் செயலிழந்து போவதை நேர்வழியின் துவஜமான ஹுஸைன் (ரழி) விரும்புவாரா? இஸ்லாத்தின் மீதான ஹுஸைன் (ரழி) யின் ஆழமான பற்றுறுதியை உலகம் நிதர்சனமாக கண்டு கொண்ட இடமே, கர்பலா.

ஹுஸைன் (ரழி) இக்கு யஸீதினை ஆயுதப் போராட்டம் மூலம் எதிர் கொள்ளும் திட்டங்கள் ஏதும் இருந்ததா? நிச்சயமாக இருக்கவில்லை. உமைய்யா பேரரசுக்கு எதிரான மக்கள் அபிப்பிராயங்களை திரட்டுவதன் மூலமான சாத்வீகமான ஆட்சி மாற்றத்தையே ஹுஸைன் (ரழி) நாடினார். இது இறுதியில் - அக்கால நடைமுறைகளைப் பொறுத்து - ஆயுதப் போராட்டத்துக்கே இட்டுச் சென்றிருக்கும் என்பது வேறு விடயம். ஆனாலும் ஆயுத மோதலை இயன்ற அளவில் தவிர்க்கவே நபிகளாரின் பேரன் விரும்பினார். மக்கள் ஏற்பை தன்னுடைய போராட்டத்தின் பக்கம் திருப்பும் பொருட்டு அவர் அக்கால முஸ்லிம் சாம்ராஜ்ய முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்தார். கூபாவில் இருந்து அவருக்கு சாதகமான சமிக்ஞை வந்தது. ஆனாலும் ஏனைய நபித் தோழர்கள் கூபா வாசிகளின் உறுதியின்மையை அறிந்து அந்த அழைப்புக்கு செவிமடுக்க வேண்டாம் என்றே ஹுஸைனுக்கு அறிவுறுத்தல் செய்தனர். 

ஆனாலும் ஹுஸைன் அந்த நபித் தோழர்களின் கருத்துக்களை புறக்கணித்து தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு அடிபணிந்தார். தன்னுடைய உள்ளுணர்வு காட்டிய தடத்தில் பயணம் செய்தார். துரதிர்ஷ்டவசமாக நபித் தோழர்களின் தீர்க்கதரிசனம் பலித்தது. கூபா வாசிகள் தங்களுடைய வாக்கில் உண்மையாளர்களாக நடந்து கொள்ளவில்லை. ஹுஸைன் (ரழி) தன்னுடைய குடும்பத்தினருடன் தனித்து விடப்பட்டார். யஸீதின் படைகள் ஈராக்கின் கர்பலாவில் ஹுஸைன் (ரழி) எனப்படும் சாத்வீக அரசியல் போராளியை ஆயுத முனையில் எதிர் கொண்டன. தன்னுடைய செயல்களில் மட்டுமின்றி தன்னுடைய தோற்றத்தில் கூட தனது பாட்டனாரான நபிகளாரை ஒத்திருந்த ஹுஸைன் (ரழி) நீசத்தனமாக படுகொலை செய்யப்பட்டார். 

கர்பலா கொலைக் களத்தில் ஹுஸைன் (ரழி) குடும்பத்தில் எஞ்சியது பெண்களும், மிகவும் இள வயதினராக இருந்த, பிற்காலத்தில் அறிவியல் தராதரத்தில் உயர்ந்து, ஆத்மீக வாழ்விலும் திளைத்திருந்த "ஸஜ்ஜாத்" ஆன அழைக்கப்பட்ட அலி ஸைனுல் ஆப்தீன் எனப்படும் ஓரே ஒரு ஆண் மகவும் தான். கர்பலாவில் ஹுஸைனுக்காக அழுத கண்கள் இன்னும் வற்றவவில்லை. ரழியல்லாஹு அன்ஹு.

கர்பலா எனப்படும் வரலாறு புரண்ட கதை நிகழ்ந்து ஆயிரத்து முன்னூறு வருடங்கள் கழித்தும் அதனை நினைவு கூர்வதன் தேவை தான் என்ன? மாண்புகள் பல பொருந்திய ஒரு குடும்பத்தின் கண்ணியம் மிக்க ஒரு புதல்வன் அநியாயம் இழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு காவிய சோகம் மட்டுமா? அல்லது நிகழ்கால அரசியல் நலன்கள் அடிப்படையில் வரலாற்றை வியாக்கியானம் செய்வதன் தேவையா? இவற்றில் எது? இரண்டுமா அல்லது இரண்டுமே அல்லாத வேறு காரணங்களா?

நபிகளாரின் காலத்தில் இருந்தே மிகவும் அடிப்படையான ஒரு விழுமியமாக கருதப்பட்டு வந்த ஷுரா எனப்படும் ஆலோசனை முறைமை கை விடப்பட்ட தருணத்தில் தான் ஹுஸைன் (ரழி) களத்தில் நுழைந்தார். ஆன்மீக வீழ்ச்சி என்பதை மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்று மிகச் சிறப்பாகவே கணிப்பிட்டு இருந்த ஹுஸைன் (ரழி) யின் விழுமியவாத பார்வையையே நாமும் கைக் கொள்ள வேண்டி இருக்கிறோம். இஸ்லாத்தின் உன்னதமான இலக்குகளை காப்பாற்ற வேண்டி எத்தகைய அதிகாரங்களையும் எதிர்த்து உண்மைகளை பேசிட வேண்டும் என்பதும் கர்பலா தரும் இன்னொரு பாடம். தூய நோக்கம் மட்டுமின்றி இலக்கை அடைவதற்கான தெளிவான செயல்வாதத்தின் தேவையையும் கர்பலாவில் நாம் கற்றுக் கொள்ளலாம்.

ஹுஸைனுக்காக அழுத கண்கள் இன்னும் வற்றவவில்லை. பேரொளிப் பிழம்பாக ஹுஸைனின் ஆளுமையை நாமும் சுவீகரித்துக் கொள்வோம் என்று இன்ஷா அல்லாஹ்.

Friday, February 5, 2016

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? – பாகம் 2

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? – பாகம் 2
டாக்டர் பர்வேஸ் ஷாஃபி
(கிரசண்ட் இன்டர்நேஷனல், செப்டம்பர் 2012)
இரண்டாம் கட்டம்:
ஐரோப்பியர்கள் முஸ்லிம் உம்மத்தைத் துண்டாடுதல்
பலவீனமாகி நொறுங்கிக் கொண்டிருந்த ஒரு கருத்தியலால் சிக்கலுற்றிருந்த முஸ்லிம் உலகின் பழுதடைந்த அரசியல் கட்டமைப்புகளை வாய்ப்பாக்கி, அதன் வளங்களைச் சுரண்டுவதற்காக ஐரோப்பியக் காலனியவாதிகள் பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உலகின் கதவுகளைத் தட்டினர். அதிலிருந்தே முஸ்லிம் வரலாற்றின் இரண்டாம் கட்டம் துவங்கியது. முஸ்லிம்களின் அரசியல் திறன்கள் அப்போது சகல கோணங்களையும் அல்லது வருங்கால விளைவுகளையும் நுணுகியுணரும் திறன்படைத்தவையாக இருக்கவில்லை; அவர்களின் இராணுவங்கள் ஒழுங்கு குலைந்து பிளவுபட்டுக் கிடந்ததுடன், அதிக விலைதரும் எவருக்கும் தமது விசுவாசத்தை தாரைவார்க்கவும் தயாராக இருந்தன. அறிவியல் மற்றும் பொருளாதார அல்லது தொழிற்துறை அகக்கட்டுமானம் என்று எதுவுமில்லை. முஸ்லிம்கள் இவ்வாறு வீழ்ந்து கொண்டிருக்கையில், ஐரோப்பியர்கள் ஏறுமுகத்தில் இருந்தனர். ஒரு உக்கிரமான சண்டைக்குப் பிறகே ஐரோப்பியக் காலனியவாதிகள் முஸ்லிம் உலகைக் கைப்பற்றினர் என்று கூறமுடியாது. மாறாக, கொள்ளையர் போல் வந்து ஐரோப்பியர்கள் முஸ்லிம்களைக் சூறையாடிய போது, வீழ்ச்சியிலும் சிதைவிலும் இருந்த முஸ்லிம்களுக்கு அது குறித்த தன்னுணர்வு கூட இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.
முதற் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் பண்புசார் வேறுபாடு இருக்கிறது. முதற் கட்டத்தைப் பொறுத்தவரை, வெகுமக்கள் நேரடியாக அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களில் ஆட்சியாளர்களைச் சவாலுக்குள்ளாக்காதவரை அவர்கள் ஒன்றும் செய்யப்படவில்லை; அவர்களின் படைப்பூக்கத்திறன் இவையல்லாத மற்ற வெளிகளில் வளர்ந்துசெழிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஐரோப்பியர்கள் தமது சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் குறித்த அச்சத்திற்கு ஆட்பட்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருக்கும் அரக்கன் (வெகுமக்கள்) விழித்துக் கொண்டால், தமது சுரண்டலின் நாட்கள் முடிவுக்கு வந்துவிடும் என்பதை அவர்கள் பூரணமாக அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் முலுக்கிய்யாவைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்றனர். முஸ்லிம் மன்னர்களாவது முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபட்ட, சமூக ரீதியில் வலிமையான ஓர் ஒற்றை அமைப்பாகவே விட்டுவைத்திருந்தனர்; ஆனால் இந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம் உம்மத்தை நிரந்தரமாக ஊனப்படுத்தும் நோக்கில் அதைத் திட்டமிட்டுப் பிளந்து துண்டாடினர். இனம், இனக்குழு, மொழி, பொருளாதாரம், மதம் போன்ற பிரிவினைக் கோடுகளின் ஊடே முதலில் உம்மத்தைப் பிளந்ததன் மூலம் அவர்கள் இதைச் செய்தனர். பின்னர் அப்பிரிவினைகளை மென்மேலும் அகலப்படுத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கினர். பிரிவினைக் கோடுகள் ஏதும் காணப்படாத பட்சத்தில், அவர்களே அவற்றைப் புனைந்துருவாக்கவும் செய்தனர்.
உஸ்மானிய கிலாஃபத்தை உள்ளிருந்து பலவீனப்படுத்துவதற்காக பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியத் தீபகற்பத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்றொரு நபரை சமூக-சமய “சீர்திருத்தவாதி” என்பதாக எழுச்சிபெறச் செய்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் எவ்வாறு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் வழிநடத்தப்பட்டார், பயன்படுத்தப்பட்டார், நிதியளிக்கப்பட்டார், ஆதரிக்கப்பட்டார் என்பதை “ஒரு பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலில் பிரிட்டிஷ் ஏஜென்ட் ஹெம்ஃபர் விரிவாக விளக்கியிருக்கிறார் (குறிப்பு: சவூதி மன்னராட்சி, வஹாபிசம் ஆகியவற்றின் வளர்ச்சியில் பிரிட்டிஷாருக்குப் பெரும்பங்கு இருந்திருக்கிறது என்பது எவராலும் மறுக்கமுடியாத ஓர் வரலாற்றுண்மை. எனினும், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபே பிரிட்டிஷ் உருவாக்கம் தானா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது). விளைவு தெள்ளத்தெளிவான அழிவுநாசம். இப்னு அப்துல் வஹ்ஹாபின் “சீர்திருத்தங்கள்” வஹாபிசம் எனுமொரு உட்பிரிவாக உருவெடுத்தன. இறைத்தூதர் விட்டுச்சென்ற வரலாற்று மற்றும் பௌதிகத் தடங்கள் அனைத்தையும் துடைத்தழிப்பதும், தமக்கு முன்னிருந்த முலுக்கிய்யாவின் ஏகாதிபத்திய வடிவத்தை இஸ்லாத்தின் பெயரால் மீள்நிறுவுவதுமே வஹாபிசத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. இன்று மக்காவில் கஅபாவையும் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியையும் சூழ உருவாகிவரும் தகதகக்கும் மேற்கத்திய ஐந்து நட்சத்திர விடுதிகளின் மத்தியில், தமது இஸ்லாமிய மற்றும் ஆன்மிகப் பாரம்பரியம் பெருமளவில் திட்ட்மிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருவதை கல்வியறிவற்ற ஏமாளி முஸ்லிம் வெகுமக்கள் கவனிக்க மாட்டார்கள் என்றே இந்த வஹாபிகள் நம்பிவருகின்றனர்.
அதே போல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பஹாவுல்லா என்றொருவரை ஆதரித்தனர். அவர் முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் பஹாயிசத்தை உருவாக்கினார். சவூதி அரேபியாவின் வஹாபிசமும் பஹாயி மதமும் இன்று மேற்கத்திய காலனியவாதிகளால் வலுவாக ஆதரிக்கப்படுபவையாக இருக்கின்றன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தோ-பாக் துணைக் கண்டத்தில் தமது இருநூறு ஆண்டுகால ஆக்கிரமிப்பின் போது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் மீதும் வேறுபட்ட அடையாளம் மற்றும் மனப்பாங்கைத் திணிப்பதன் மூலமும், தாழ்வு அல்லது உயர்வு மனப்பான்மையை விதைப்பதன் மூலமும் அவற்றைச் செயலிழந்தவையாக ஆக்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர். 1857 விடுதலைப் போருக்குப் பிறகு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்பது நாட்டைப் பிரிட்டிஷ் காலனியத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வல்லது எனும் அபாயத்தை பிரிட்டிஷார் உணரத்துவங்கினர். எனவே, இந்து-முஸ்லிம் சமுதாயங்கள் மத்தியில் தேசியவாதத்தை வளர்த்துருவாக்குவதில் அவர்கள் ஈடுபட்டனர். பின்னர் இரு சமுதாயங்களின் நலன்களையும் பிளவுபடுத்தும் நோக்கில் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’, ‘முஸ்லிம் லீக்’ என்ற இரண்டு அரசியல் கட்சிகளை உருவாக்கித் துணைக்கண்டம் இந்தியா-பாகிஸ்தான் என்று இரு தனித்தனி நாடுகளாகப் பிளவுபடுவதற்கு வழியமைத்தனர்.
எனினும், இத்தேசியப் பிரிவினையுடன் மட்டும் பிரிட்டிஷார் திருப்தியடைந்து விடவில்லை. முஸ்லிம்கள் தமக்குள்ளாகவே மேலும் பிளவுபட வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். 1857 விடுதலைப் போருக்குப் பிறகு, ஹனஃபி சிந்தனைப் பள்ளி மேலும் உட்பிளக்கப்பட்டது. குர்ஆனுக்கான கீழைத்தேயவாத வாசிப்பிலிருந்து, இறைத்தூதரின் (ஸல்) ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பணி தொடர்பான சில குறிப்பிட்ட அம்சங்களைத் ”தெளிவுபடுத்தக் கோரும்” அறிவார்வமிகு கேள்விகளை அவர்கள் முன்னெடுத்து வந்தனர். இதன் காரணமாக உலமா மத்தியில் தோன்றிய சூடான விவாதங்களைப் பிரிட்டிஷார் ஊக்கப்படுத்தினர். உலமாவின் பரஸ்பர நிலைப்பாடுகள் இறுதியில் இரு துணைச் சிந்தனைப் பள்ளிகளாக இறுகிப் படிகமாயின. பிற்காலத்தில் அவை இரண்டும் பிரிட்டிஷாரின் நேரடி அல்லது மறைமுக உதவியோடு தமது தலைமையகங்களை முறையே தேவ்பந்த் மற்றும் பரேலியில் நிறுவிக்கொண்டன. இக்குழுக்கள் முறையே தேவ்பந்திகள் மற்றும் பரேல்விகள் என்று அறியப்படுகின்றனர். தேவ்பந்திகள் மேலும் பல குழுக்களாகப் பிளவுபடுத்தப்பட்டனர். அதன் ஒரு விளிம்பில், ஜிஹாதையும் அரசியலையும் விட்டு ஒதுங்கிக்கொள்ளும் செயலாண்மையற்ற தப்லீக் ஜமாஅத்; மறுவிளிம்பில் சவூதி வஹாபிசத்தால் உணர்வூக்கம்பெற்று, சமாதிகளில் நிகழ்த்தப்படும் ஷிர்க்கை துடைத்தழிக்கும் நோக்கில் வழமையாகத் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான் போன்ற இனக்குழுக்கள். இதனுடன் கூடுதலாக, பிரிட்டிஷார் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி என்றொரு நபரையும் ஆதரித்துப் போற்றினர். அந்த நபர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனக்கு நபித்துவ அந்தஸ்து இருப்பதாகக் கோருமளவுக்குச் சென்றுவிட்டார் (அல்லாஹ் பாதுகாப்பானாக).
அரேபியத் தீபகற்பத்தில் சமய ரீதியில் வஹாபிசம் காலூன்றியதன் பிறகு, பிரிட்டிஷ் காலனியவாதிகள் தம்முடைய வேலைத்திட்டத்திற்கு சவூதிக் கோத்திரங்களில் இருந்து ஆள்பிடிக்க ஆரம்பித்தனர். அதற்கு முன் இச்சவூதிக் கோத்திரங்கள் நஜ்தின் பரந்துவிரிந்த பாலைவனத்தில் சுற்றித்திரிந்து கொண்டும், ஹஜ் பயணக் கூட்டங்களைக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ‘கிளர்ச்சி செய்வதன் மூலம் உஸ்மானிய கிலாஃபத்தைக் கீழறுப்பது’ என இச்சவூதிக் கொள்ளையர்களும் அல்-ஹிஜாஸின் ஷரீஃப் ஹுசைனும் தமது பல்வேறு கடிதங்களின் வழியாக பிரிட்டிஷாருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். இதற்கு விலையாக, பிரிட்டிஷார் அவர்களுக்கு அரேபியா மீதான அதிகாரத்தை வாக்களித்தனர். இருவருக்கும் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டது. இன்று இந்தச் சவூதிகள், தாம் ஈரானுக்கு எதிராக (அபூ சுஃப்யான் வகை) சுன்னியிச நோக்கத்திற்காக செயலாற்றுவதாகவே கூறிவருன்றனர்; மேலும், ஈரானுடனான தமது பகைமையை உட்பிரிவுவாத மட்டத்திற்கு முன்தள்ளவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலோ, மேலை ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாக உஸ்மானிய கிலாஃபத்தைச் சேர்ந்த தமது சொந்த அஹ்லுஸ் சுன்னா சகோதரர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுவதில் இவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. ஆக, தீர்மானிக்கும் விதியாக இருந்தது ஏதேனுமொரு தர்க்க ரீதியான வாதமோ கொள்கையோ அல்ல; மாறாக பச்சையான சுயநலமும் சந்தர்ப்பவாதமுமே அன்று முதல் இன்று வரை விதியாக இருந்துவருகிறது.
காலனித்துவக் காலப்பிரிவில் முஸ்லிம் உம்மத்தின் ஆகப்பெரிய பேரவலமாக உருவெடுத்தது, வெளியிலிருந்து தூண்டப்பட்ட பிரிவினையோ உருச்சிதைவோ அல்ல; மாறாக, முஸ்லிம்கள் அவற்றை ஏற்று அகவயமாக்கிக் கொண்டது தான் ஆகப்பெரிய அவலமாக அமைந்தது. கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த முத்தகீ தலைமைத்துவமும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சியின் ஊடாகவோ; அல்லது அதனைப் பீரி-முரீதி இயல்பிலான ஒரு நிறுவனமாக (சீடரின் மீது மகான் கொண்டிருக்கும் சம்பூரண மேலாதிக்கத்தின் அடிப்படையிலான உறவு) மாற்றுவதன் ஊடாகவோ மேலும் ஓரங்கட்டப்பது. இதனுடன் கூடுதலாக, உலமா மற்றும் மகான்களின் அடக்கத்தலங்களைப் புனிதத் தலங்களாக மாற்றுவதையும் காலனியவாதிகள் ஊக்குவித்தனர்; அத்தகு அடக்கத்தலங்களில் அறியாத பாமர மக்கள் பல சமயங்களில் ஷிர்கின் எல்லையைத் தொட்டுவிடும் படியான வணக்க-வழிபாடுகளில் ஈடுபடவாரம்பித்தனர். மறுபுறம், இதே காலனியவாதிகள் பரேல்விகளைத் தாக்குவதற்கு தேவ்பந்திகளையும் வஹாபிகளையும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதன் மூலம், ஒரு நிரந்தரத் தாழ்செறிவுப் போர்ச்சூழலை உருவாக்கினர்.
மஸ்ஜிதுகளும் மார்க்க நிறுவனங்களும் பெரியளவில் விவசாய நிலங்களையும் அவை போன்ற இன்னபிற சொத்துக்களில் இருந்து வரும் கணிசமான வருமானங்களையும் பெற்றிருந்ததால், அவை ஒப்பீட்டளவில் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றிருந்தன. நன்கொடைகள் மற்றும் தானதருமங்களைக் கொண்டு மஸ்ஜிதுகளை நடத்துவது என்ற கருத்தாக்கமே முதற் கட்டத்தைப் பொறுத்தவரை இல்லை எனலாம். ஆனால் இரண்டாம் கட்டத்திலோ, காலனியவாதிகள் படிப்படியாக மஸ்ஜிதுகளிடமிருந்து இவ்வளங்களைப் பறித்து, அவை தமது இருப்புக்கு நன்கொடைகளை நம்பியிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாக்கினர். மேலும் மேற்கத்தியக் கல்விபயின்ற ஒரு வர்க்கம் தோன்றியதை அடுத்து, மஸ்ஜிதுகள் தமது வீரியத்தை இழக்கலாயின. சமூகத்தை வழிநடத்தும் திறன்படைத்த உலமா மற்றும் அறிஞர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அவை எவ்விதச் சுயமரியாதையும் அற்ற, பிறப்பு அல்லது இறப்பின் போதான எளிய சடங்குகளை நிறைவேற்றுவதற்கென்றே ஒதுக்கப்பட்ட எளிய மனம்படைத்த முஅத்தின்கள், காரிகள் மற்றும் மௌலவிகளை உற்பத்தி செய்யலாயின. இப்பிற்போக்குவாத மதபீடத்திடம் செயற்துடிப்போ உலக அறிவியல்கள் பற்றிய ஞானமோ அல்லது சமூகத்தை வழிநடத்துவற்கான திறனோ மிகக் குறைவாகவே இருந்ததெனினும், இஸ்லாத்தை அதன் மிக அடிப்படையான மட்டத்தில் உயிரோடு வைத்திருத்தல், காலனியத்தின் இருண்ட அவநம்பிக்கை தரும் யுகத்தில் வெகுமக்களுக்கு ஆறுதலளித்தல் என்ற முக்கிய பெறுமதிமிக்க செயல்பாட்டை அது நிறைவேற்றிவந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
நவ-காலனியக் கட்டம்:
சுதந்திரம் எனும் மாயையை உருவாக்குவதாகவும், வஞ்சகத்தால் நிரம்பியதாகவும், காலனியக் கட்டத்தைக் காட்டிலும் அதிதீவிர வடிவிலான ஒரு மேற்கத்திய மயமாக்கலாகவும் இருப்பதைத் தவிர நவகாலனியக் கட்டம் காலனியக் கட்டத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதாக இல்லை. இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து துவங்கிய நவகாலனியக் கட்டத்தில், நெறிப்படுத்தப்பட்ட ‘தேசியச் சுதந்திரப் போராட்டத்தின்’ விளைவாக ஒற்றை முஸ்லிம் உம்மத்தை உடைத்துச் சுமார் ஐம்பது நாடுகள் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்துக்கு அடையாளமாக உள்ளூர் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும் புலமைத்துவ, அரசியல், பொருளாதாரச் சுதந்திரம் என்பவை கானல் நீராகவே எஞ்சின. மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படும் இவை பொருளாதார ரீதியில் மேற்கத்திய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஆயத்தச் சந்தைகளாகவும், கச்சாப் பொருட்களை வழங்குகின்ற மூலங்களாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக, உலகளாவிய முதலாளித்துவ அமைப்புக்குள் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. எனினும், இதற்கு உள்ளூர் அரசியல் மேட்டுக்குடிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருக்க வேண்டிய தேவையிருந்தது. விளைவு, தங்கள் சொந்த மக்கள் மீதே அவர்கள் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.
இரண்டாம் உலக யுத்தத்தின் வெற்றியாளர்கள் தான் வரலாற்றை எழுதினர்; அத்துடன், தாம் உலகை ஆளுவதற்காகத் தமது பிரதிபிம்பங்கள் என்ற வகையில் ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களை நிறுவினர். உள்ளூர் மேட்டுக்குடிகளைப் பயன்படுத்தி முஸ்லிம் நாடுகளும் இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான சட்டவிரோத நிறுவனங்களின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன. மேற்குலகு தனது லாபம் மற்றும் நலனுக்குகந்த எவ்வொரு தீர்மானத்திற்கான ஒப்புதலையும் இந்நிறுவனங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்கிறது. அத்தீர்மானங்கள் சட்டபூர்வமானவையே என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன. துன்புறும் எஞ்சிய மனிதகுலமோ இந்நிறுவனங்களைத் தமது இன்னல்களை முறையிடுவதற்கான ஒரு தளமாகவும், தாம் பிழைத்திருப்பதற்கு மேலதிக மேற்கத்திய உதவிகளைக் கேட்டு இறைஞ்சுவதற்கான ஒரு தளமாகவும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றது.
மனிதஇனத்தை நாகரிகமயமாக்குவதே காலனித்துவக் காலகட்டத்தில் மேற்குலகின் இலட்சியப் பணியாக இருந்தது. நவகாலனியக் காலத்தில் அந்த இலட்சியப் பணி ஜனநாயகம் (democracy), ஜனநாயக விழுமியங்கள், நியமங்கள், நம்பிக்கை அமைப்பு ஆகியவற்றை ‘புனிதமான ஒரே சித்தாந்தம்’ என்ற ரீதியில் பரப்புவதாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. மேற்குலகக் கருத்தாக்கத்தின் படி, ‘demo’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘மனிதன்’ என்று பொருள். இப்போது அக்கருத்துச்சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. (14 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையான) மறுமலர்ச்சி மற்றும் (1730 முதல் 1850-கள் வரையான) தொழிற்புரட்சிக்கு பிறகு அந்த வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊடாக மனிதன் தன்னுடயை விதிக்குத் தானே எஜமானனாக மாறியிருக்கிறான்; இனியும் அவன் அல்லாஹ்வின் போதனைகள், வழிகாட்டுதல் மற்றும் திட்டத்தின் படி வாழ்வதற்கு அல்லது கட்டுப்படுத்தப்படுவதற்கு விரும்பாத ஓர் உயரத்திற்கு முன்னேறிவிட்டான், உயர்ந்துவிட்டான்.” வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், பிரபஞ்சப் படிநிலை அமைப்பில் இறைவன் வகித்துவந்த அதியுச்ச ஸ்தானத்தை மனிதன் கைப்பற்றிவிட்டான். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
உண்மையைக் கூறின், கிரேக்கக் காலங்களிலேயே கூட அசல் டெமாக்ரசி (“மக்களே நேரடியாக ஆட்சி செய்தல்”) நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லை. மேற்கத்திய அரசியல் விஞ்ஞானிகளும் மெய்யியலாளர்களும் கூட இதனை ஒப்புக்கொள்கின்றனர். உணமையைக் கூறின, அவர்கள் அதை “கும்பல் ஆட்சி” என்று வசைபாடியிருக்கின்றனர்; பண்படுத்தப்படாத மனித உள்ளுணர்வை அவர்கள் நம்புவதில்லை. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது புளூட்டோக்ரசியே; அதாவது, பணக்காரர்கள் மற்றும் செல்வம்படைத்தவர்களின் ஆட்சி. புளூட்டோக்ரசி ஆட்சிபீடத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்த அரசியல் அமைப்புக்கு ஒரு வலுவான மையம் மற்றும் திசையை வழங்குகிறது; முதலாளித்துவம் அதன் பொருளாதார இயந்திரமாகச் செயற்படுகிறது. அனைத்துப் பிற நிறுவனங்களும் அரசுக்காகப் பணியாற்றுகின்றன; அல்லது அரசோடு இணைந்து பணியாற்றுகின்றன. இந்த அரசியல் தத்துவம் மற்றும் அதனோடிணைந்த கட்டுமானங்களின் வினைத்திறன் விடயத்தில் சமூகத்திலுள்ள மேற்கத்திய மேட்டுக்குடிகள் மத்தியில் ஒருமித்த கருத்துடன்பாடு நிலவுகிறது.
புளூட்டோக்ரசி, டெமாக்ரசி அல்லது பிற எந்தத் தத்துவமாயினும்-இவை எதற்கும் மனித விழுமியங்களோடு எந்தச் சம்பந்தமுமில்லை. மனிதத் தன்மையற்ற இவ்வமைப்புமுறையில் ஏழைகளையும் அவர்களின் உழைப்பையும் சுரண்டியே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக முடியும். முதலாளித்துவத்தின் அதியுச்ச விழுமியம் “லாபத்தைப் பெருக்குவது” மட்டுமே. பேராசை மற்றும் சுரண்டலுக்கான ஒரு மங்கல மொழி தான் (euphemism) “லாபத்தைப் பெருக்குவது” என்பது. இது ஓர் அசமத்துவம் மற்றும் வர்க்கப் போருக்கு வழிகோலுகிறது; ஏறத்தாழ செல்வமனைத்தையும் ஒரு வீதத்துக்கும் குறைவான செல்வந்தர்களின் கரங்களில் அது குவியச் செய்கிறது. இதற்கெதிராகவே, அமெரிக்காவில் மானுட மற்றும் சமூக சமத்துவ விழுமியங்களுக்காகக் குரலெழுப்பும் “99 வீத வெகுமக்கள்” எதிர்ப்பியக்கங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் கட்சிகளும் தேர்தல்களும் வெறும் ஒப்பனைச் சாதனங்களே; அவை தமது இயல்பிலேயே தர்க்க முரணானவை. “மாற்றம் சாத்தியமே” என்று நம்பவைத்து மக்களை ஈர்த்து இவ்வரசியல் அமைப்புக்குள்ளேயே அவர்களை வைத்திருப்பது தான் அவற்றின் குறிக்கோள். இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே தத்துவத்தின் வெவ்வேறு சாயல்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஆக, வஞ்சனையும் தோற்றமயக்கமும் ஜனநாயகத்தின் வேர்களிலேயே இருக்கின்றன. உண்மையில் இந்த மக்களாட்சி என்பது மக்களின் பெயரால் செல்வந்தர்கள் ஆட்சி செய்வதே. எனினும், இறைவனிடமிருந்தான இவ்விலகலில் ஒவ்வொரு வர்க்கமும் திரட்டிக்கொள்ளும் நலன்கள், விருப்புகள் மற்றும் பலன்கள் முற்றிலும் வெவ்வேறாக இருக்கின்றன; அவற்றுக்கு நடுவே மிகப் பரந்த இடைவெளி இருக்கிறது. தன்னுடைய நலனுக்கு உகந்தவாறு பிற மக்களை எவ்வாறு பண்படுத்துவது என்பதில் மேற்குலகுக்குச் சுமார் நூற்றைம்பதாண்டு கால அனுபவம் இருப்பதால், ஒரு அதிதீவிர சுரண்டல்வாத அமைப்பு கூட தனது அப்பட்டமான குறைபாடுகளையும் தாண்டிப் பிழைத்திருக்க முடிகிறது. டெமாக்ரசியின் அறுதி இலக்கும் விழுமியமும் என்னவென்றால், மனிதர்கள் அனைவரையும் செல்வமும் அதிகாரமும் படைத்தோருக்கு அடிமைகளாய் மாற்றுவதே.
முதிர்ச்சியடைந்த புளூட்டோக்ரசிகள் போலன்றி, சமீபத்தில் சுதந்திரமடைந்த முன்னாள் காலனி நாடுகளிடம் (அவை இராணுவத்தால் ஆளப்படினும், குடிமைப் பின்னணி கொண்டவர்களால் ஆளப்படினும் சரியே) உறுதியாகவும் ஆழமாகவும் வேரூன்றிய ஓர் தத்துவத்துடன் கூடிய வலுவானதொரு மையமோ பீடமோ இருப்பதில்லை. “பலவீனமான அரசுகள்” என்று அவை வருணிக்கப்படுகின்றன. இராணுவம், ஆட்சிப் பணித்துறை, நீதித்துறை, செயலாட்சித் துறை, நாடாளுமன்றம் என அவற்றின் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி அதிகார மையங்கள் போன்று செயல்படுகின்றன. யு.எஸ்ஸும் பிற ஏகாதிபத்தியச் சக்திகளும் அந்நிறுவனங்கள் ஒவ்வொன்றுடனும் தனித்தனியாக நேரடி உறவைப் பேணுகின்றன. ஏதேனுமொரு நிறுவனம் யு.எஸ். வகுத்துக் கொடுக்கும் பாதையில் நகரவில்லையெனில், மற்றொரு நிறுவனத்தைக் கொண்டு அது முடக்கப்படும்.
முஸ்லிம் அரசுகளிலுள்ள மேல்தட்டினர் மேற்குலகில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்; மேற்கத்திய விழுமியங்கள், நியமங்கள் மற்றும் நம்பிக்கை அமைப்பினை அவர்கள் தம்முள் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு நலன்கள் ஒன்றாகவே இருக்கின்றன. அவர்கள் எப்போதேனும் இஸ்லாத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் என்றால், அது வெகுமக்களை முட்டாளாக்குவதற்கு மட்டுமே. இச்சுதேசி மேட்டுக்குடிகள் தமக்கான அரசியல் சித்தாந்தத்தைச் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் தெரிவையோ மாற்றையோ மேற்குலகு அவர்களுக்குத் தருவதில்லை. தங்கள் நாடுகள் சடவியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மேற்குலகைச் சார்ந்து இருக்கும்படிச் செய்வதும்; சுரண்டப்படுவதற்கும் மேற்கத்தியச் சந்தைகளோடு ஒருங்கிணைக்கப்படவும் ஏதுவாக, உள்ளூர்ப் பொருளாதாரங்கள் திறந்திருக்கும் படி பார்த்துக் கொள்வதுமே அவர்களின் பணி.
மேற்குமயமாதல் எனும் நோய் மதச்சார்பற்ற மேல்தட்டினரை மட்டும் தொற்றியிருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் பெருந்துயரான வகையில், முழுச் சமய பீடமுமே கூட தமது இஸ்லாமிய அறிவையும் மீறி அதனால் பாதிக்கப்பட்டுள்ளது. நவகாலனியக் கட்டத்தில் சமய பீடம் மாபெரும் நிலைமாற்றத்திற்கு உள்ளாகி, ஜனநாயகச் செயல்முறை என்று சொல்லப்படுவது ஓர் ஏமாற்று என்பதை அறியாமால், அதில் பங்கேற்கத் துவங்கியது. இது இஸ்லாத்தின் இலக்குகள் மற்றும் வழிமுறைகளுக்கு முரணானது. இருப்பினும் சமூக நீதி, சமத்துவம், மனிதகுலத்தை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்தல் போன்ற இஸ்லாமிய இலக்குகளை அதன் மூலம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில், அவர்கள் அந்தச் செயல்முறையை ஏற்று வரித்துக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் முனைந்தனர். சமய, அரசியல் கட்சிகளுக்கு (அரசியல் கட்சி அல்லாத குழுக்களுக்கும் கூட) இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு குறுக்கு வழியாகவும், அது கைக்கெட்டும் தொலைவில் உள்ளது போன்றும் தோற்றம்தந்து ஆசைகாட்டிச் சுண்டியிழுக்கிறது.
மேற்கத்தியச் செல்வாக்குக்கு உள்ளான அவர்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டியதே இலக்கு என நம்பத் துவங்கிவிட்டனர். (அந்தத் தேர்தல்கள் பொதுவாக இராணுவத்தின் மோசடிக்கு ஆளாகின்றன என்பது தனிக் கதை ). ஆட்சிக்கு வந்ததும், ஷரீஆவை விதியாக்குவதன் மூலம் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்கி விடலாம் என்று அவர்கள் கற்பிதம் செய்கின்றனர். அவர்கள் கூறும் இஸ்லாமிய அரசினால் மேற்குலகோடு சகஜீவனம் நடத்த முடியும்; பொருளாதார ரீதியில், உலகளாவிய முதாலாளித்துவ அமைப்போடு ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக எஞ்சியிருக்க முடியும்; அரசியல் ரீதியில், மேற்குலகோடு ஒரு அடிமைத்துவ உறவைப் பேண முடியும். இது மேட்டிமைத்தனமான, மேலிருந்து கீழாக அமையும் ஒரு அணுகுமுறை. மேலும், இது தீவிரப் பழுதுள்ள ஒரு அணுகுமுறையுமாகும். ஏனெனில் வழிமுறைகளையும் இலக்குகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் திறனோ; அல்லது, இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய ஜனநாயக அமைப்புகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறனோ இந்த அணுகுமுறையிடம் இல்லை. அளவுக்கு மீறி எளிமைப்படுத்தப்பட்டதும், முதிர்ச்சியற்றதும், வழிபிறழச் செய்வதுமான இம்மாதிரி ஷரீஆவுக்கும் நபிகளாரின் சுன்னாவுக்கும் எதிராக இருப்பது பற்றி இவர்களுக்கு கவலையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணல் நபியவர்கள் சமூகத்தில் இஸ்லாமியக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே, பிற வழிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலவில்லை. இஸ்லாத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பரப்புவதன் மூலமும் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் (ஏதேனுமொரு அம்சத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிப்பதல்ல) நபியவர்கள் அன்றிருந்த இனக்குழுவாத ஜாஹிலி சமூகத்தின் சமூகக் கட்டமைப்பை இஸ்லாமியச் சமூகமாக நிலைமாற்றினார்கள் என்றே சீறா நமக்குப் போதிக்கிறது. எப்போது இந்த சமூக நிலைமாற்றம் நிகழ்ந்தேறியதோ, அப்போது இஸ்லாமிய அரசுக்கான பாதை தானாகவே திறந்துகொண்டது. எனவே, இஸ்லாமிய இயக்கத்தின் இலக்கு இஸ்லாமிய அரசைக் கட்டமைப்பது அல்ல; மாறாக, அறியாமைச் சமூகத்தின் சமூக அடித்தளத்தை இஸ்லாமிய சமூகமாக நிலைமாற்றுவதே அதன் இலக்காக இருக்கிறது. பின்னர், அந்நிலைமாற்றத்தின் தர்க்க விளைபலனாக இஸ்லாமிய அரசு அமைகிறது. இது கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறை. சீறாவின் நோக்கில் இதுவே இஸ்லாமியப் புரட்சி.
நவகாலனியக் கட்டத்தில், மாற்றத்திற்கான முக்கிய வினையூக்கிகளுள் ஒன்றாக இருப்பது உலமாவும், அவர்கள் நிறுவிய நிறுவனங்களும். முரண்நகையாக, மாற்றத்திற்கும் முத்தகீ தலைமைத்துவம் தோன்றுவதற்கும் அவையே தடைக் கற்களாகவும் இருக்கின்றன. இதற்கான முதன்மைக் காரணங்களுள் ஒன்று, பெரும்பான்மை சுன்னி உலமாவும் அவர்களின் நிறுவனங்களும் நடப்பிலுள்ள ஆட்சிகளால் (பிரதானமாக சவூதி ஆட்சியால்) வெகுவாக நிதியுதவி அளிக்கப்படுகின்றனர் என்பதே. இந்த உலமாவும் அவர்களின் பீடங்களும் தொடர்ந்து மோசடியான, நெறிபிறழ்ந்த ஒரு சுன்னி அரசியல் சிந்தனையையே பின்பற்றுவதை இவ்வித நிதிநல்கை உத்தரவாதம் செய்துகொள்கிறது. இந்த அரசியல் சிந்தனையில் முஆவியாவும் யஸீதும் விதந்தோதப் படுகின்றனர்; அபூ சுஃப்யானின் மனைவி ஹிந்தாவுக்கும் கூட மறுவாழ்வு அளிக்கத் தற்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உஹதுப் போரில் ஹம்ஸா (ரழி) வீரமரணம் அடைந்தபோது இந்த ஹிந்தா அன்னாரின் உடலை உருக்குலைத்தத்துடன், அன்னாரின் ஈரலையும் மென்றுதுப்பியவர். மரணித்த ஒருவருக்கு இழைக்கப்பட்ட இம்மாபெரும் அவமதிப்பைக் கண்டு நபிகளார் அளவிலாக் கடுந்துயருற்றாகள். ஹம்ஸா (ரழி) அவர்கள் நபிகளாரின் சிறிய தந்தையாக, நெருங்கிய நண்பராக, ஏறத்தாழ சம வயதுடையவராக இருந்தமை நபிகளாரை இன்னுமதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேற்குலகு மற்றும் ஸியோனிஸ்டுகள் உடனான நட்பும், அவர்கள் மீதான சார்பும், துவக்ககால மன்னராட்சிப் பரம்பரைகளின் (முலுக்கிய்யா) ஒரு தொடர்ச்சியாக சவூதி மன்னராட்சி வளர்ந்துசெழிப்பதை ஆதரிப்பதும் இன்றியமையாதவையாகக் கருதப்படுகின்றன. சவூதி பெட்ரோ-டாலர்கள் “உலமாவையும்”, “அதிகாரபூர்வ” சுன்னி உலகநோக்கையும் அண்ணல் நபியின் ஆகக் கொடிய எதிரிகளைப் புகழ்ந்துபாராட்டுகிற ஒரு பாதையிலேயே வைத்திருப்பின், மாற்றத்திற்கான வாய்ப்புகள் மங்கலானவையே. எனவே சவூதி நிதிநல்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முத்தகீ தலைமைத்துவம் தோற்றம்பெற முடியும். எதிர்நோக்கியிருக்கும் போராட்டத்திற்குத் தேவையான தரம்வாய்ந்த முத்தகீ தலைமைத்துவம் உருவாவதற்கு உட்பிரிவுவாதப் போக்கு மற்றும் சட்டவிரோத முரண்பாடுகளை விட்டுத் தூய்மையான புதிய நிறுவனங்கள் தேவை. “இஸ்லாமிய” அரசியல் கட்சிகளால் இப்பிரச்சினையைத் தீர்க்கமுடியாதென்பதால், உண்மை இஸ்லாமிய இயக்கம் முதல் நடவடிக்கையாக ஓர் அறிவுசார் போராட்டத்தைத் துவக்க வேண்டும்.
இலக்குகளையும் வழிவகைகளையும் குழப்பிக் கொண்ட காரணத்தினாலேயே, சமய மேல்தட்டினரும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தோல்வியுற்று வருகின்றனர். இருப்பினும், அவர்கள் தமது வழிமுறையில் மாற்றத்தை அனுமதிப்பதையோ சீறாவிலிருந்து படிப்பினைகள்கள் பெறுவதையோ விரும்புவதில்லை. ஆனால், சமய பீடத்தின் இந்த ஜனநாயக உலகநோக்கானது முலுக்கிய்யா என்னும் நெறிபிறழ்ந்த சுன்னி அரசியல் சிந்தனையின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் விளங்கிக் கொள்ளும் போது, இவ்விரு மனப்பான்மைகளின் ஒரு கலவையைக் கொண்டு உலகியல் மாற்றங்களைச் சாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இஸ்லாமிய இலக்குககள் பற்றியும் ஒரு வரலாற்றுப் பரிணாமத்தின் ஊடாக அவற்றை அடைவதற்கான வழிவகைகள் பற்றியும் இங்கு தரப்பட்டுள்ள கோட்பாட்டியல் பின்னணி, முஸ்லிம் உலகில் ஏற்பட்டுவரும் சமீபத்திய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகாண்பதைச் சாத்தியமாக்குகிறது. குறிப்பாக, இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளதால் எகிப்து மிகச் சிறந்தவொரு எடுத்துக்காட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறது; துருக்கி மற்றொரு, ஆனால் வேறுபட்ட எடுத்துக்காட்டு.
அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைய வேண்டுமென்ற முஸ்லிம்களின் ஏக்கமும் எழுச்சியும் மெய்யானது. ஆனால், இஃக்வானுல் முஸ்லிமீனைத் தன்வசப்படுத்தவும்; நிகழவிருக்கும் நிலைமாற்றத்தை அதன் புரட்சிகர ஆன்மாவை விட்டுத் தூரமாக்கவும்; அதை வெறுமனேயொரு அதிகார வர்க்க மாற்றமாக ஆக்குவதற்கும் அமெரிக்கா மும்முரமாக முயலுகின்றது. அந்த அதிகார வர்க்க மாற்றம் எவ்வாறிருக்கும் என்றால், அதில் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத் தலைவர்களுக்கு சில அரசாங்கப் பதவிகள் வழங்கப்படும்; ஆனால் உண்மை அதிகாரத்தை இராணுவமே -அதன் மூலம் அறுதியில் அமெரிக்காவே-தம் கைகளில் வைத்துக் கொள்ளும். நடந்தேறும் நிகழ்வுத் தொடர் இஃக்வானுல் முஸ்லிமூன் செய்துகொள்ளும் சமரசங்கள், “யதார்த்தத்துடன்” அனுசரித்துப் போதல் என்பனவற்றின் கதையை வெளிப்படுத்தத் துவங்கியிருக்கிறது. அவற்றோடு சம்மந்தப்பட்ட கோட்பாடு, அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. (கீழ்வரும் பத்திகளைக் காண்க):
முஸ்லிம்களின் எழுச்சி துவங்கி ஓராண்டுக்குப் பிறகு, இவ்வாண்டின் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உள்துறைச் செயலர் வில்லியம் பர்ன்ஸ் இஃக்வான்களின் துணைப் பொதுவழிகாட்டி கைராத் அல்-ஷாத்திரைச் சந்தித்தார் (அற்பமான காரணங்களைக் கூறி தேர்தல் ஆணையம் கைராத் ஷாத்திரின் வேட்புமனுவைச் நிராகரிப்பதற்கு முன், சக்திவாய்ந்த வேட்பாளராகக் கருதப்பட்டவர் அவர்). இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கை தொடர்ந்து பேணப்படுமாயின், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வளைகுடா ஷெய்க்டோம்களிடம் இருந்து 20 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியுதவி பெற்றுத் தரப்ப்படுமென பர்ன்ஸ் வாக்களித்தார். இஃக்வான்களும் நடப்பு நிலையைப் பேணுவதற்கு உடனே ஒப்புக் கொண்டனர். இதற்கு முரணாக இஃக்வான்கள் வெளியிட்ட அறிக்கை வெறுமனே பொது மக்களின் நுகர்வுக்கானது. (செயலுத்தி சார்ந்த உதவிக்காக மூலோபாயம் சார்ந்த சமரசம் செய்துகொள்ளல்; நண்பரையும் பகைவரையும் வேறுபடுத்திக் காணமுடியாதிருத்தல்). நீதித்துறையும் ஆயுதப் படைகளின் உயர்மட்டக் கவுன்சிலும் (SCAF) அதிபர் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், ஏற்கனவே இஃக்வான்கள் வென்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தனர். இஃக்வான்கள் இதனை எதிர்த்தபோதும் இதுவரை பலனில்லை. (ஒரு நிறுவனத்தைக் கொண்டு மற்றொன்றை முடக்குதல்).
முஹம்மது முர்ஸி அதிபரான சில நாட்களிலேயே ஜூலை 11-ல் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்தார்.(இது ஹிலாரி கிளிண்டன் கெய்ரோ வருவதற்கு முன்பு நிகழ்ந்தது). மன்னர் குடும்பத்துக்கு மிக நெருக்கமான சவூதி கல்வியலாளர் ஒருவர் லண்டனிலிருந்து வெளிவரும் அல்-ஹயாத் செய்தித்தாளில் “இஃக்வான்களின் முர்ஸியிடம் வளைகுடாக்காரர்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்ற தலைப்பில் தானெழுதிய ஒரு கட்டுரையில் எழுப்பியிருந்த கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதாக இவ்விஜயம் அமைந்தது. வளைகுடா ஷெய்க்டோம்களின் நான்கு பெரும் விவாரங்களில் முர்ஸி ஓர் பகிரங்க உத்தரவாதம் வழங்க வேண்டுமென அவர் அக்கட்டுரையில் கேட்டிருந்தார்:
1. ஷெய்க்டோம்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அந்த நாடுகளிலுள்ள இஃக்வான் உறுப்பினர்களையோ வலையமைப்புகளையோ பயன்படுத்தக் கூடாது.
2. ஈரானுக்கு எதிராகத் தங்களுக்கு உதவவேண்டும்.
3. ஜனநாயக துருக்கியைக் காட்டிலும் சவூதி அரபியாவுடனும் அதன் அண்டை நாடுகளுடனும் வலுவான உறவுகளைப் பேணவேண்டும்.
4. ஹமாஸ் தனது கிளையமைப்பாக இருப்பினும், ஃபாலஸ்தீனர்களின் உட்பூசல் அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்.
ஒரு வாரத்திற்குள்ளாகவே முர்ஸி தனது அறிக்கைகளின் ஊடாக இவ்வனைத்து கோரிக்கைகளுக்கும் உடன்பாடு தெரிவித்துவிட்டார். சவூதி அரேபியாவில் இருந்தபோது அவர் சவூதி மன்னரிடம், எகிப்து சவூதி அரபியாவுடன் தந்திரோபாயக் கூட்டணியைப் பேணுமென்றும்; பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதில் (வளைகுடா மன்னராட்சிகளுக்கு ஈரானிடமிருந்து வரும் சவாலையே இது நேரடியாகக் குறிக்கிறது) உதவுமென்றும் உறுதிமொழி அளித்தார். இதன் மூலம் “மிதவாத சுன்னி முகாமின்” கொள்கையே எகிப்தின் கொள்கையாக இருக்குமென்று உத்தரவாதம் வழங்கினார். முன்னாள் பாகிஸ்தான் தளபதி பர்வேஸ் முஷாரஃபின் “முதலில் பாகிஸ்தான்” கொள்கையைப் போன்றே, எகிப்தும் “முதலில் அரபு” என்ற வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து பேணுமென்றும்; துருக்கியின் ஜனநாயக மாதிரியை அளவுக்கு மீறி பின்பற்றப் போவதில்லை என்றும் தனது சவூதி விருந்தோம்பிகளிடம் முர்ஸி உறுதிகூறினார். மேலும், கேட்டுக்கொண்ட படியே ஃபாலஸ்தீனக் குழுக்களிடம் சமதொலைவு பேணுவோமென்றும் முர்ஸி வாக்களித்தார். இதைக் காட்டிலும் முக்கியமாக, ஃபாலஸ்தீன எதிர்ப்புப் போராட்ட அணிக்கெதிராக சவூதி மற்றும் இஸ்ரேலிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பக்கம் நின்று பணியாற்றுவோம் என்றும் அவர் வாக்களித்தார். (உள்ளூர் மேல்தட்டினர் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் சுயச்சார்பு கொண்டவர்கள் அல்லர்; மாறாக, அறுதியில் யு.எஸ்ஸுக்கும் அதன் உள்ளூர் சவூதி முகவர்களுக்கும் கீழ்ப்படிந்தவர்களே. எவ்விலை கொடுத்தேனும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது என்ற அவர்களின் குறுகிய நோக்கு, அவர்களைத் தமது சொந்தச் சகோதரர்களுக்கு எதிராகச் செயற்படுமாறும் ஏகாதிபத்திய மேற்குலகு மற்றும் ஒடுக்குமுறைச் சக்திகளின் பக்கம் அணிசேருமாறும் நிர்பந்திக்கிறது).
யு.எஸ். உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் முர்ஸியைச் சந்திப்பதற்காக எகிப்துக்கு வருகைதந்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன், “குடிமை ஆட்சியை நோக்கிய முழுமையான நிலைமாற்றத்தை அதன் சகல உள்ளர்த்தத்திலும் யு.எஸ். ஆதரிக்கிறது” என்று அறிவித்தார். அவர் அதற்கு மறுநாள் SCAF தலைவர் களத்தளபதி ஹுசைன் தன்தாவியைச் சந்தித்து, குடிமை அமைப்புடன் இணங்கிப் போகும்படி வலியுறுத்தியதோடு, எகிப்திய இராணுவம் முழுமையாகத் தனது “தேசியப் பாதுகாப்புப் பாத்திரத்துக்கு” திரும்ப வேண்டுமென்றே யு.எஸ். விரும்புகிறது என்றும் அறிவித்தார். அதற்குப் பகரமாக, இராணுவத்துக்கு இன்னும் பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியை வாக்களித்தார். (யு.எஸ். ஒன்றுக்கு மேற்பட்ட பலவீனமான அதிகார மையங்களைத் தனித்தனியாகக் கையாளுகிறது).
இந்தச் சீரழிந்த சுன்னி அரசியல் சிந்தனை மீது கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய ஜனநாயக மாதிரியால் சிரியாவிலும் கூட நண்பரையும் பகைவரையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் கொடிய சர்வாதிகாரிகளே ஆட்சியிலிருக்கின்றனர்; இதற்குச் சிரியாவும் விதிவிலக்கில்லை. எனினும், குறைந்தபட்சம் சிரியாவாவது கடந்த நான்கு பத்தாண்டுகளாக நிலையாக வலுவானதொரு இஸ்ரேல்-எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பதுடன், பல்வேறு ஃபலஸ்தீனக் குழுக்களுக்கு உதவிசெய்தும் வருகிறது. இந்த ஒரு காரணம் மட்டுமே கூட அஸதின் ஆட்சியைச் சீர்குலைக்காமல் இருப்பதற்குப் போதுமானது; அதேவேளை யு.எஸ்., இஸ்ரேல் மற்றும் சவூதிகளும் பிற ஷெய்க்டோம்களும் அஸதின் ஆட்சியைச் சீர்குலைக்கக் கடுமையாக முயன்று வருகின்றனர்.
இது மற்றொரு கேள்வியை எழுப்புகிறது. சிரியாவிலுள்ள எதிர்ப்பு அணி, யமன் மற்றும் பஹ்ரைனைப் போல் பொதுமக்கள் எதிர்ப்பியக்கத்தைத் துவங்குவதை விடுத்து, லிபியாவைப் போல் துவக்கத்திலேயே திடீரென ஆயுதப் போராட்டத்தில் குதித்தது ஏன்? வன்முறை மற்றும் பலாத்காரத்தின் மீதான சார்பு சுன்னி அரசியல் சிந்தனையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது எனினும், அது மேற்கத்திய-சவூதிய-ஸியோனிஸ ஆயுதங்கள் மற்றும் கூலிப்படைகளால் மேலும் தூண்டிவிடப்பட்டது. முஆவியா அதிகாரத்திற்கு வந்த நாளிலிருந்து இதுவரை சுன்னி அரசியல் சிந்தனையின் முன்மாதிரியில், ஒருபோதும் அமைதிகரமான அதிகார மாற்றம் நிகழ்ந்தது இல்லை. ஒன்று, தனது எதிராளிகளைக் கீழடக்குவதற்கு வரைமுறையற்ற பலாத்காரத்தைப் பிரயோகிக்க வேண்டும்; அல்லது, தாம் கீழடக்கப்படவும் படுகொலை செய்யப்படவும் தயாராகிக் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நடுவில் வேறு தெரிவு இல்லை. மேலும், நிச்சயமான விதிகளோ விதிமுறைகளோ முன்னுதாரணமோ எதுவும் இல்லை. எதிர்ப்பு அணி தம்முடைய மனக்குறைகளை வெளிப்படுத்த விரும்பியிருப்பின், அவர்கள் மிகுதியான பலாத்காரத்தை உள்ளார்ந்து நாடாமல் பஹ்ரைன் அல்லது யமனைப் போல் பொதுமக்கள் போராட்டத்தை நிச்சயம் துவங்கியிருக்க முடியும். (ஒன்று பூரணச் சரணடைவு அல்லது வரைமுறையற்ற வன்முறை வெறியாட்டம் என்ற) இவ்வகை துருவநிலை அணுகுமுறை, எதிர்ப்பணியினரை முட்டுச் சந்திலேயே முடக்கிவைக்கும். இதன் காரணமாகவே கொடிய சர்வாதிகாரிகளும் அவர்களின் பரம்பரை ஆட்சிகளும் பல பத்தாண்டுகள் நீடிக்கமுடிகிறது. இந்த அரசியல் மனப்பான்மையே இன்னும் மேலோங்கிக் காணப்படுகிறது. (மிகுதியான பலாத்காரத்தின் மீதான உள்ளார்ந்த சார்பு தான் சர்வாதிகாரிகள் நீடித்திருப்பதன் இரகசியம்).
தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை, துருக்கியைக் காட்டிலும் அதிக வெற்றிகரமான நாடு வேறெதுவும் இல்லையென்றே தோன்றுகிறது; அப்படி இருந்தும் கூட அது யு.எஸ்ஸின் மேலாதிக்கத்தையும் அதன் பூகோள மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலையும் ஏற்று, இஸ்ரேலுடன் நட்புபாராட்டி வருகிறது; யு.எஸ்ஸின் மூலோபாய நலன்களை ஒருபோதும் சவாலுக்குள்ளாக்குவதும் கிடையாது. என்றாவது ஒருநாள் பிற முஸ்லிம் நாடுகள் யு.எஸ். ஆதரவுபெற்ற சர்வாதிகளிடமிருந்து விடுதலைபெற நேருமாயின், அவை பின்பற்றத்தக்க ஒரு ஜனநாயக முன்மாதிரியாகத் துருக்கியை உயர்த்திப் பிடிப்பதையிட்டு யு.எஸ். வசதியாக உணருவதற்குக் காரணம் இதுவே. துருக்கியின் சமயவாத அரசியல் கட்சி அணுகுமுறையுடன் பத்தாண்டுகால அனுபவம் பெற்றுவிட்ட யு.எஸ்., இப்போது எகிப்திலும் ஒரு ஜனநாயக ஒழுங்கை நோக்கிய நிலைமாற்றத்தைக் கையாளுவதில் தன்னம்பிக்கையை உணருகிறது. மறுபுறம் பஹ்ரைனிலோ, மனித உரிமைகளை மதிப்பதை விடுத்து ஒடுக்குமுறையையும் கொடுமைகளையும் பிரயோகிக்க யு.எஸ். தயாராக இருக்கிறது; ஏனெனில், அங்குள்ள பிரபுத்துவ மன்னராட்சியைக் கவிழ்ப்பதென்பது யு.எஸ்ஸின் மூலோபாய நலன்களை நேரடியாக அச்சுறுத்துவதாக அமைகிறது. (மாற்றம்பெறுவதற்கு எந்த நாடு அனுமதிக்கப்படும், எந்த நாடு தடுத்து நிறுத்தப்படும் என்பது யு.எஸ்ஸின் மூலோபாய நலன்களைப் பொறுத்தது).
மேற்குலகுடன் நட்புபாராட்டாத எந்தவொரு அரசாங்கத்தையும் தூக்கியெறிவதற்காக எதிப்பு அணிகளை ஆதரிப்பதில் யு.எஸ்ஸுக்கோ ஸியோனிஸ்டுகளுக்கோ எவ்விதத் தயக்கமும் இல்லை; அந்த எதிர்ப்பு அணிகள எந்தவொரு குழு அல்லது சிந்தாந்தத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும்; அல்காயிதா அல்லது நன்கறியப்பட்ட பயங்கரவாதிகள் உள்ளிட்டோராக இருப்பினும் சரியே. (அந்தப் பயங்கரவாதிகள் யு.எஸ்ஸின் நலன்களுக்குச் சேவை செய்கின்றனரா இல்லையா என்பது தான் இங்கு அளவுகோலாக இருக்கிறது ).
முடிவுரை:
“மிதவாத சுன்னி” அரசுகள் என்று கூறப்படுபவற்றின் செயற்பாடுகளின் ஊடாகக் காணத்தக்க இந்த உட்பிரிவுவாத சுன்னி அரசியல் சிந்தனை சீரழிந்த ஒன்றாகவும், தேய்ந்து செல்வதாகவும், மீள்பரிசீலனை மற்றும் சீர்திருத்தத்தின் பால் தேவையுடையதாகவும் இருக்கிறது என்பது வரலாற்றுப் பரிணாமத்தின் ஊடாகத் தெளிவாகப் புலப்படுகிறது. முஸ்லிம் அரசுகளின் வீழ்ச்சி மற்றும் நலிவினால் வரும் இழிவு உள்ளங்கை நெல்லிக்கனியாகும்; எனவே, நாம் அதன் கருத்தியலின் கற்பிதங்களைச் சவாலுக்குள்ளாக்க வேண்டும். வெறுமனே மேல்பூச்சான ஒரு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது போதுமானதல்ல; அது யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் கைப்பற்றப்படுகிறது என்பதே இங்கு அசல் கேள்வி: யு.எஸ். மற்றும் ஸியோனிஸ நலன்களுக்குக் கீழ்ப்படிந்த நிலையில், ஒரு ஜனநாயக முகமூடியுடன், சுன்னி-மேற்கத்திய-ஸியோனிஸ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரிலா? அல்லது வெகுமக்களின் புரட்சிகர உணர்வின் பால் சார்பு கொண்டு (அந்தப் புரட்சிகர உணர்வு முதலில் ஒரு இயங்காற்றல் மிக்க இஸ்லாமியச் சமூகமாக நிலைமாற்றப்பட வேண்டும்), தமது சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரிலா? ஒரு சமயவாத அரசியல் கட்சியால் இப்பணியைச் சாதிக்க முடியாது; உண்மை இஸ்லாமிய இயக்கத்தால் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். அதன் பிறகே, அது ஒரு சுயேட்சையான இஸ்லாமியத் திசையில் நடைபோட முடியும். எனினும் இதற்கு முன்நிபந்தனை யாதெனில், முலுக்கிய்யாவின் காலந்தொட்டு தேக்கநிலையில் இருந்துவரும் நம்முடைய உலகநோக்கின் (மேற்கத்திய ஜனநாயக விழுமியங்களும் நியமங்களும் அதன் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன) அடிப்படைக் கற்பிதங்களை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். திருக்குர்ஆன் பிரகடனம் செய்வது போல், “மக்கள் தமது மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாத வரை, அல்லாஹ் அந்த மக்களின் நிலைமைகளை மாற்ற மாட்டான்…” (13:11). ஆக, ஒரு சமூகம் தனது இதயத்திலிருப்பதை மாற்றிக்கொள்ளாத வரை அந்தச் சமூகத்தின் நிலை மாறாது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், உலகநோக்கு மற்றும் மனோபாவத்தில் ஏற்படுகின்ற மாற்றம் உலகியல் நிலைமைகளிலான மாற்றத்துக்கு வழிகோலும்.
முஸ்லிம் அரசியல் சிந்தனையின் உயர்ந்த முன்மாதிரியை நோக்கி நாம் பரிணமிக்க வேண்டுமெனில், சுன்னி அரசியல் சிந்தனையினுள் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்ககால வரலாற்று முரண்பாடுகளை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். இச்சீர்திருத்தங்கள் நம்மைக் காலம் மற்றும் வரலாற்றில் ஓர் உண்மையான குவியப் புள்ளிக்கு இட்டுச் செல்லும்; அதாவது, உட்பிரிவுவாதமோ பரஸ்பரப் பகைமைகளோ இல்லாத ஒரு நிலையில் நமது அண்ணல் நபிகளார் இவ்வுலகை விட்டுச்சென்ற சமயத்தில் நிலவியது போன்றதொரு காலத்திற்கு அவை நம்மை இட்டுச்செல்லும். “ஜனநாயகம்” என்று கூறப்படுவதையும், அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான குறுக்குவழி ஜனநாயக மாதிரிகளையும் கைவிடுகிறோமெனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதே தர்க்க ரீதியான அடுத்த நடவடிக்கையாக இருக்கும். இவ்விரு மாற்றங்களும் சாதிக்கப்படவில்லை என்றால், அவற்றை அகவயப்படுத்தி நடைமுறைப்படுத்தவில்லை என்றால், வன்முறை தொடரவே செய்யும். அதன் மூலம் வேறு ஏதேனுமொரு புரட்சி வேண்டுமானால் சாத்தியமாகலாம்; கண்டிப்பாக இஸ்லாமியப் புரட்சி சாத்தியமாகாது. குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிறைந்ததாக நமது இதயங்களிலுள்ள உலகநோக்கை மாற்றுவதற்கு, அகவயப்படுத்துவதற்கு, சீர்திருத்துவதற்கு வேண்டுமானால் நீண்டதொரு காலம் தேவைப்படலாம்; ஆனால், விவாதம் மற்றும் திறந்த மனத்தைக் கொண்டு அது செய்துமுடிக்கப்பட்ட பின், நமது உலகியல் நிலைமைகளை மாற்றுவதற்கு உண்மையில் மிகச் சுருக்கமானதொரு காலமே தேவைப்படும். இந்தக் காலவியல்பு நபிகளாரின் சீறாவில் மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.
–முற்றும்–

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? – பாகம் 1

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? – பாகம் 1
டாக்டர் பர்வேஸ் ஷாஃபி
(கிரசண்ட் இன்டர்நேஷனல், ஆகஸ்டு 2012)
(தற்போது ஏற்பட்டுவரும்) முஸ்லிம் மறுமலர்ச்சி மற்றும் மாற்றங்கள் தொடர்பாக தர்க்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் எளிதில் விளக்க முடியாத பல அம்சங்கள் இருக்கின்றன. இந்த மறுமலர்ச்சிகளையும் மாற்றங்களையும் அவதானிக்கையில், சில சங்கடமான கேள்விகள் எழுகின்றன:
1. முஸ்லிம் நாடுகளில் (குடிமை அல்லது இராணுவப் பின்னணி கொண்ட) சில குறிப்பிட்ட தனிநபர்களோ குடும்பங்களோ இப்படியொரு நீண்டநெடுங்காலம் ஆட்சிசெய்ய முடிவது எப்படி? அதிகாரத்தில் இருப்பவர்களாயினும் அவர்களை எதிர்ப்பவர்களாயினும் வன்முறை மற்றும் பலாத்காரத்தையே சார்ந்திருப்பது ஏன்?
2. பிரபுத்துவ அல்லது சர்வாதிகார ஆட்சிமுறைகளுக்குள் அவற்றை விழச்செய்யும் பிரத்யேகமான எதுவும் அவற்றின் வரலாற்றுப் பரிணாமத்திலேயே இருக்கின்றதா?
3. முஸ்லிம் உலகில் மறுமலர்ச்சி மற்றும் இஸ்லாமிய மாற்றங்களை முன்மொழிபவர்களை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் மேற்குலகும் ஆதரிப்பது ஏன்?
4. மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நாடுகளில், மேற்குலகுடனும் அதன் பெருவர்த்தக நிறுவனங்களுடனும் ‘எப்போதும் போல சுமுகமானதொரு’ உறவு நிலவுவது ஏன்?
5. ஒரு மூச்சில் முஸ்லிம்களைத் தனது நண்பர்கள் என்றும், அடுத்ததிலேயே அவர்களைப் பயங்கரவாதிகள் என்றும் ஏகசமயத்தில் தனது நலன்களுக்கேற்ப மாற்றிமாற்றிப் பிரகடனம் செய்யும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மேற்குலகின் பொறிக்குள் முஸ்லிம்கள் தொடர்ந்து விழுவதற்குக் காரணமென்ன?
6. இந்த மறுமலர்ச்சிகள் மற்றும் மாற்றங்களுக்கான மேற்கத்திய எதிர்வினை சுன்னி உலகில் மட்டும் மற்றதை ஒப்பிடுகையில் வித்தியாசமாக இருப்பது ஏன்? மறுபுறம் பார்க்கின், முஸ்லிம்களின் எதிர்வினையும் பொதுவாக மேற்குலகுடையதை ஒத்ததாகவே இருப்பது ஏன்?
7. இந்தப் புரட்சியாளர்கள் தமது சமூகங்களின் மீதான மேற்குலகின் மேலாதிக்கத்தையோ, மேற்குலக மதிப்பீடுகளையோ, முதலாளித்துவப் பொருளாதார மாதிரியையோ சவாலுக்குள்ளாக்காதது ஏன்?
8. முஸ்லிம்களிடம் தமது இலக்குகள் பற்றியும், அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் ஓர் புலமைத்துவத் தெளிவு இருக்கின்றதா? வேறு வார்த்தைகளில் கேட்பதாயின் மறுமலர்ச்சியைத் துவக்கி, உருவாக்கி, அணிதிரட்டி, ஒழுங்குபடுத்துவதற்கும் முத்தகீ தலைமைத்துவத்தால் வழிநடத்தப்படுவதற்கும், அதன் மூலம் இஸ்லாமிய நோக்குடன் இயைந்த வகையிலான வழிமுறைகளின் ஊடாக இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைவதற்கும் திறன்படைத்தாக அவர்களின் புலமைத்துவ உலகநோக்கு இருக்கின்றதா?
9. இறுதியாக, யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் இந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுகிறது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஓர் உலகநோக்கினுள், அதிலும் குறிப்பாக முழு இஸ்லாமிய வரலாற்றையும் தழுவியதாக அமைந்த ஓர் அரசியல் சிந்தனையிலேயே தங்கியிருக்கின்றன. முஸ்லிம்கள் தமது இலக்குகள் பற்றியும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் ஒத்திசைவு நிறைந்த, முரண்பாடுகளை விட்டுத் தூய்மையான தமது உலகநோக்கு பற்றிய ஓர் புலமைத்துவத் தெளிவைப் பெற்றிருப்பார்களாயின், மேற்கூறிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஒருவரால் எளிதில் விடையளிக்க முடியும். எனினும், நிலைமை அவ்வாறு இல்லை. இந்தத் தெளிவின்மையானது ஓர் கருத்தியல் குழப்பத்தை வெளிக்காட்டுகிறது. அது முஸ்லிம்களைத் தமது உண்மை எதிரிகளை இனங்காணுவதிலிருந்து தடுத்துக்கொண்டும், அவர்கள் தமது ஒவ்வொரு அடியிலும் சமரசம் செய்துகொண்டாகவேண்டுமென நிர்பந்தித்துக்கொண்டும் இருக்கிறது. ’அர்த்தமிகு மாற்றம் எதுவும் மேற்குலகின் சம்மதமின்றி நிகழுவது சாத்தியமில்லை என்பது தான் உண்மை’ என்பதாக அது அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, உலகநோக்கில் தெளிவற்றிருக்கும் இத்தகையவொரு சூழ்நிலையை துனீஷியா, லிபியா, ஏமன், எகிப்து மற்றும் வளைகுடா ஷெய்க்டோம்களிலும், இப்போது சிரியாவிலும் அவதானிக்க முடிகிறது.
முஸ்லிம் அரசியல் சிந்தனை குறித்து, குறிப்பாக சுன்னி அரசியல் சிந்தனை குறித்து ஓர் அனைத்தளாவிய, முறைப்பாங்கான அணுகுமுறையை மேற்கொள்ளும்போது பிரச்சினை எங்கிருக்கிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. இந்த எழுத்தாளரும் கிரசண்ட் இன்டர்நேஷனல் பத்திரிக்கையும் உட்பிரிவுவாதக் கருத்தாக்கங்களிலிருந்து எப்போதும் விலகியே இருந்துவந்திருக்கின்றனர். எனினும், பிரச்சினை ஒரு குறிப்பிட்ட உட்பிரிவின் கருத்தியலில் இருக்கிறதெனும்போது வெறுமனே அதனை அலட்சியப்படுத்துவதோ கண்டனம்செய்வதோ மட்டும் போதுமானதாக மாட்டாது. அந்தக் குறிப்பிட்ட உட்பிரிவின் கருத்தியலில் உள்ள பிரச்சினையை அதன் வேரிலேயே இனம்காணும் வரை முஸ்லிம் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிகரமாக அமையாது. இந்த அரசியல் குழப்பத்திற்கும் சிந்தனை மற்றும் செயலில் தோன்றும் முரண்பாடுகளுக்கும் தோற்றமூலமாகவுள்ள சுன்னி அரசியல் சிந்தனை பற்றி மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு தார்மீகத் துணிவும் புலமைத்துவ நேர்மையும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. ஏனெனில், முஸ்லிம் உலகிலுள்ள பெருந்தொகையினர் ஏற்றுப் பின்பற்றும் ஒன்றாக அது இருக்கிறது. எனவே, புரட்சியாளர்கள் மத்தியிலும் கூட அது தொடுவதற்குத் தடைசெய்யப்பட்டவொரு கருப்பொருளாகவே இருக்கிறது.
முதற் கட்டம்:
இஸ்லாத்தின் திசைநெறியில் மாற்றம், வீழ்ச்சி மற்றும் சிதைவு
இரண்டு கட்டங்களாகப் பகுக்கத்தக்க சுன்னி அரசியல் சிந்தனையின் வரலாற்றுப் பரிணாமத்திலிருந்தே மேற்கண்ட தீர்மானம் வருவிக்கப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உலகினுள் நுழைந்து மேலாதிக்கம் செலுத்தவாரம்பித்த மேற்கத்தியக் காலனித்துவம் வரையான முதற் கட்டத்தில், சுன்னி அரசியல் சிந்தனையும் உலகநோக்கும் கோத்திரவாதம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி-பொறாமை, எதேச்சதிகாரம் ஆகியவற்றில் சிக்குண்டு கிடந்தது. இந்தத் தீமைகளைக் களைந்தெறிவதற்குத் திறன்படைத்த இஸ்லாத்தின் பரிசுத்தக் கோட்பாடுகள் அமலாக்கம்பெறுவதற்கான வாய்ப்பு துவக்கத்திலிருந்தே ஒருபோதும் வழங்கப்படவில்லை.
நமது அன்பிற்கினிய இறைத்தூதரின் (ஸல்) மரணத்தையடுத்து இஸ்லாத்தின் திசைநெறியில் மாற்றம் ஏற்படலானது. இறைத்தூதருக்கும் அவரின் தோழர்களுக்கும் எதிராகத் தொடுக்கப்பட்ட பல்வேறு போர்களில் முஷ்ரிக் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். எனினும், மக்கா வெற்றி வரை பிழைத்திருந்த அபூ சுஃப்யானும் அவரது குடும்பமும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு வேண்டாவெறுப்பாக முஸ்லிம்களாக மாறினர். முஸ்லிம்களாக மாறிவிட்ட தமது எதிரிகள் விடயத்தில் இறைத்தூதரின் போக்கு எப்போதுமே உளப்பூர்வமானதாகவும் பரிவுநிறைந்ததாகவுமே இருந்தது. ஆனால், அபூ சுஃப்யானின் விடயத்திலோ அவரது தீவிர இஸ்லாமிய எதிர்ப்பின் காரணமாக, அவர் தென்படும் போதெல்லாம் இறைத்தூதரவர்கள் தமது முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்; அவருடன் நெருக்கமான உறவைப் பேணவுமில்லை. இறைத்தூதரவர்கள் (ஸல்) இறைவனடி சேர்ந்த பிறகு, அபூ சுஃப்யானின் குடும்பத்தினரும் பிள்ளைகளும் இரத்தபந்தச் சலுகையின் ஊடாக இஸ்லாமிய அரசில் முக்கியப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதுடன், புதிதாகப் பெற்ற இந்த அதிகாரத்தை நன்கு வலுப்படுத்திக்கொள்ளவும் ஆரம்பித்தனர். ஆக, அபூ சுஃப்யான் இறைத்தூதருடனான நேரடி மோதலில் எதனை அடைந்துகொள்வதில் தொல்வியுற்றாரோ, அதனை இஸ்லாமிய வலயத்திற்குள் இருந்தவாறே அடைந்துகொண்டார்.
அபூ சுஃப்யானின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அரசியல் மற்றும் இஸ்லாமிய அரச நிருவாகம் தொடர்பான முக்கிய இஸ்லாமியப் போதனைகளைத் திரிக்கவாரம்பித்தனர். அவர்கள் தமது அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், ஏதோவொரு வகையில் சட்டப்பூர்வத் தன்மையைப் பெறுவதற்கும் இது அவர்களுக்கு வகைசெய்தது. சூது, உட்சதி, வெளிப்படைப் போர் ஆகியவற்றினூடாக முஆவியா இஸ்லாமிய அரசின் முழுமுதல் ஆட்சியாளராக மாறினார். அவர் இறைத்தூதரின் தோழமையை ஒரேயொரு நாள் கூடப் பெற்றிராத நிலையிலும், ‘வேதவெளிப்பாட்டை எழுத்தில் பதிபவர்’ என்பதானவொரு பட்டத்தைத் தமக்கு வழங்கிக் கொண்டார். மக்கா வெற்றியை அடுத்து ஓராண்டிலேயே இறுதி வஹி இஸ்லாத்தின் செய்தியை நிறைவுசெய்துவிட்டது; அதைத் தொடர்ந்து இறைத்தூதரின் மரணமும் நிகழ்ந்தது (என்பதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்). அபூ சுஃப்யான் இஸ்லாத்தின் போதனைகளை உருத்திரிப்பதன் மூலம் இரண்டு குறிக்கோள்களை அடைய நாட்டம் கொண்டிருந்தார்: (1) போலி ஹதீஸ்களைப் புனைந்துருவாக்குவதன் மூலமும் அசல் ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்வதன் மூலமும் தனக்கொரு சட்டப்பூர்வத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வது. தனக்கும் தனது சகாக்களுக்கும் “ரழியல்லாஹு அன்ஹு” என்ற இஸ்லாமிய அடைமொழிகளை வழங்கிக் கொள்வது. தன்னுடைய நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில் முக்கியக் குர்ஆனிய வசனங்களின் அர்த்தத்தை மாற்றுவது. (2) இறைத்தூதருக்கு நெருங்கிய பல தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் பெற்றிருக்கவேண்டிய பதவி பொறுப்புகளை விட்டு அவர்களைத் தடுப்பது. அது மட்டுமின்றி, அவரை எதிர்த்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு சட்டவிரோதத் தன்மையும், தமது சட்டவிரோதத் தன்மைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு வாதத்தையும் முறியடிப்பதற்கு பலாத்காரத்தின் மீது இயல்பாகவே சார்பு கொள்ளுவதும் அந்த நாள்தொட்டே சுன்னி அரசியல் சிந்தனையின் இன்றியமையாதவொரு அம்சமாக இருந்துவரலாயிற்று. இந்தத் திரிபுகள் மற்றும் வழிகேடுகளை அம்பலப்படுத்தி உண்மை இஸ்லாமியப் போதனைகளைப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமையை இறைத்தூதரின் மிக நெருங்கிய சஹாபாக்கள் பெரும்பாலானோரிடமிருந்து பறித்தது மட்டுமின்றி, அவர்கள் அதில் பிடிவாதமாக இருந்தபோது ஒன்று அவர்கள் தொலைதூரப் பிரதேசங்களுக்கு நாடுகடத்தப்பட்டனர், அல்லது சிறையிலடைக்கப்பட்டனர், அல்லது விஷமூட்டப்பட்டனர். இவ்வாறு செய்ததன் மூலம் அதிகாரப் பசி கொண்ட அபூ சுஃப்யானின் கோத்திரம் தனது சொந்த ஏகாதிபத்தியப் பார்வையைப் பிரச்சாரம் செய்வதற்கான களம் அகலத் திறந்துவிடப்பட்டது.
இஸ்லாமிய அரசுக்குப் பதிலாக பரம்பரை ஆட்சிமுறையே அரசியல் கட்டமைப்பு மற்றும் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. அரசியல் மற்றும் அரச நிருவாகம் தொடர்பான விவகாரங்கள் மிகவும் கண்டிப்பான முறையில் பொதுமக்களின் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவையாக மாறியபோது, அவர்கள் சமயச் சடங்குகளை மாத்திரம் நிறைவேற்றுபவர்களாகச் சுருக்கப்பட்டார்கள். கிளர்ச்சியூட்டும் விடுதலை உணர்ச்சியோ உணர்வோ கொஞ்சமும் அற்ற வகையில் சடங்குகள் மீதான அதீத வலியுறுத்தல் தான் நியமம் என்றாகி இன்று வரை அது அவ்வாறே தொடர்ந்து வருகிறது. அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தொடர்பாகவும், அதனைத் தக்கவைத்துப் பேணுவது தொடர்பாகவுமுள்ள இஸ்லாமிய விதிமுறைகள் ஒருபோதும் காலூன்ற அனுமதிக்கப்படவில்லை. கோத்திரவாதத்தின் தீமைகள், பரஸ்பரப் பொறாமை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கை, துன்புறுத்தல்கள், சர்வாதிகாரம் ஆகியவை சுன்னி அரசியல் எண்ணக்கருக்கள், கட்டமைப்பு, நடைமுறை ஆகியவற்றில் உள்ளடங்கியவையாக மாறின. இதன் விளைவாக, பனூ உமையா மற்றும் பனூ அப்பாஸ் மன்னர் பரம்பரைகளின் அடிப்படையிலமைந்த சுன்னி அரசியல் அமைப்பு எக்காலத்திலும் சட்டப்பூர்வமானதாக மாற முடியவில்லை. எனினும், அவர்கள் இந்தச் செயல்முறையில் அதிமுக்கிய வெளிகளுக்கான இஸ்லாத்தின் உண்மைச் சமத்துவப் போதனைகளை நிரந்தரமாக இருட்டடிப்புச் செய்துவிட்டனர். இஸ்லாத்தில் அரசியல் என்பதன் வரைவிலக்கணம் என்னவென்றால், குர்ஆன் மற்றும் சுன்னாஹ் அறிவுறுத்தியுள்ள சட்டபூர்வமான முறையில் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாகும். (அது தக்வாவின் அடிப்படையில் வெகுமக்கள் ஒருவரைப் பொறுப்புக்குத் தெரிவுசெய்வதாகும்; மாறாக, ஒருவர் தன்னை தானே முன்மொழிந்து அல்லது தன்னை அத்துமீறித் திணித்து பலாத்காரம் அல்லது வஞ்சனையைக் கொண்டு அதிகாரத்தைப் பெறுவதல்ல. ) அதிகாரம் செலுத்துதல் எனபது மனிதகுலத்துக்குச் சேவைசெய்யும் பொருட்டு ஒரு கூட்டு முடிவெடுக்கும் சட்டகத்தின் ஊடாகச் சமூகநீதியை நிலைநிறுத்துவதுடன் தொடர்புடையதாகும். எனவே, சட்டவிரோதமான அல்லது முறைகேடானதொரு வழியில் அதிகாரத்தைப் பெறுவதும், வரைமுறையற்றுப் பொருளாதார வளங்களைச் செலவிடுவதும் கண்டிப்பான முறையில் தடுக்கப்பட்டதாகும். சுருங்கக் கூறுவதாயின், இஸ்லாம் என்பது சடங்குகளாகச் சுருக்கப்பட்டு, தனிமனித அளவில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றாக ஆக்கப்பட்டது. இந்த ஆரோக்கியமற்ற, சட்டவிரோத மாற்றங்கள் இஸ்லாத்தின் திசைநெறியை நிரந்தமாக மாற்றியதுடன், அதன் அனைத்தளாவிய சமத்துவ உணர்வும் ஊதிஅணைக்கப்பட்டது.
இந்தச் சட்டவிரோதத் தன்மை வெகுமக்களின் நலன்கள், விதிமுறைகள், மதிப்பீடுகள், நம்பிக்கைக் கோவை ஆகியவற்றை அதிகார வெறிபிடித்த மேட்டுக்குடிகளுடையவற்றிலிருந்து வேறுபட்டவையாக ஆக்கியது. உதாரணமாக, எந்தவொரு சுன்னி சமூகத்திலும் இராணுவப் பயிற்சி என்பது ஒரு அங்கமாக இருக்கவில்லை. மேட்டுக்குடிகளின் சட்டவிரோதத் தன்மை வெகுமக்களை நம்பாதவர்களாக அவர்களை ஆக்கியிருந்தது தான் இதற்கு மிகச்சரியான காரணம். இவ்வாறாகவே சட்டவிரோதத் தன்மை, கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் ஆகியவை சுன்னி அரசியல் சிந்தனை மற்றும் கட்டமைப்புகளின் அடையாள முத்திரைகளாக மாறின. இதன் விளைவாக, கொடுங்கோன்மை மற்றும் பலாத்காரத்தின் துணையோடு நிலைநிறுத்தப்படும் ஒரு புதிய ஏகாதிபத்திய வகை மதத்தை இஸ்லாத்தின் பெயரால் பரப்புவது நியமமாகிவிட்டது. இந்த வகையில், இஸ்லாம் என்பது ஒரு ‘மதமாகச்’ சுருக்கப்பட்டது. அதில் உணர்வேதுமற்ற வழிபட்டுக் கிரியைகள் முதன்மை முக்கியத்துவம் பெற்றவையாக மாற்றப்பட்ட அதேவேளை, ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புமுறையுடன் அவற்றுக்கிருக்கும் ஒட்டுறவு முற்றாகத் துண்டிக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி, சமூகநீதி போன்ற மதிப்பீடுகள் ஆரம்ப நாட்களிலேயே கைவிடப்பட்டுவிட்டன. ஒடுக்குமுறைச் சகதியில் சிக்குண்ட இந்த வகை இஸ்லாத்தை முஸ்லிம்கள் இன்றுவரை எவ்விதமான சிந்தனையோ மீளாய்வோ இன்றி பின்பற்றி வருவது தான் அவர்கள் நண்பனையும் எதிரியையும் பிரித்தறிய இயலாதவர்களாகவும்; முஸ்லிம் சமூகத்தின் நியாயபூர்வமான, இறையுணர்வு மிக்க, சட்டபூர்வ தலைவர்களை அதிகாரப் பசி கொண்ட சந்தர்ப்பவாதிகளைவிட்டுத் தனியே பிரித்தறிய இயலாதவர்களாகவும்; வெகுமக்களின் நலனுக்காக, சட்டபூர்வமான முறையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அமலாக்குவது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உலமா மற்றும் அறிஞர்களும் அவர்களை ஆதரித்த முஸ்லிம் வெகுமக்களும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதன் மூலம் புலமைத்துவத் தேடலின் கதவும், உருவாகி சில காலமே ஆகியிருந்த இஸ்லாமியச் சமூகத்தை வழிநடத்துவதற்கான இறையுணர்வு மிக்க சட்டபூர்வ இமாம்களின் உரிமையும், இஜ்திஹாதின் கதவும் படிப்படியாக மூடப்பட்டன. இதற்காக, முஸ்லிம்களின் படைப்பூக்கத்திறன் அரசியல் அல்லாத, இறையியல் அல்லாத வெளிகளான கலை, கட்டடக் கலை, போர்த்திற நுட்பங்கள் மற்றும் கருவிகளின் மேம்பாடு, அறிவியல் கற்கை மற்றும் ஆய்வு முறைமைகளின் பெருக்கம், பகுத்தறிவுவாதம் தொடர்பான கிரேக்க ரோம கருத்தாக்கங்களைக் கற்றல் போன்றவற்றின் பக்கம் மடைமாற்றி விடப்பட்டது. இந்த புலமைத்துவ முன்னேற்றங்கள் அனைத்துக்கும் காரணம் இஸ்லாம் தானே தவிர சுன்னி அரசியல் கட்டமைப்புகள் மற்றும் அமைப்புமுறைகளோ; அல்லது, பரம்பரை முறை சர்வாதிகாரத்தால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட சுன்னி அரசாங்கங்களின் வழிகாட்டலோ நிதியுதவியோ ஆர்வமூட்டலோ அல்ல என்பதை இங்கு உறுதியாக மனதில் இருத்தவேண்டும்.
மேற்கூறியதற்கு ஆதரவான சான்றாக முன்வைப்பதற்கு துவக்ககால முஸ்லிம் வரலாற்றின் நம்பிக்கைக் கோட்பாட்டுச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தாக வேண்டுமென்கிற அவசியமில்லை. மாறாக, முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் நாகரிகத்தின் வீழ்ச்சி மற்றும் சிதைவே கூட தன்னளவில் இந்தச் சட்டவிரோதத் தன்மை மற்றும் சர்வாதிகாரத்துக்கு எதிரானவொரு அனுபவபூர்வ சான்றாக விளங்குகிறது. ஒருவர் இந்த வரலாற்று உண்மைகளுடன் உடன்பட்டு அவற்றை ஏற்றுக்கொண்டாலும் சரி, அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரியே-முஸ்லிம் உலகைப் பொறுத்தவரை அவற்றின் தாக்கம் படுநாசகரமானது. மேற்கத்திய காலனியத்தின் தோற்றத்திற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த பிரிவினைகள், உட்சண்டை, வீழ்ச்சி, சிதைவு, பிளவுபடல் ஆகியன அன்னியர் ஆக்கிரமிப்புக்கு வழிகோலின என்பதை எவரும் மறுக்கமுடியாது. உருத்திரிந்து செயலிழந்திருக்கும் சுன்னி அரசியல் சிந்தனைக்கான சான்றினை முதலில் முஸ்லிம் நாகரிகத்தின் வீழ்ச்சி மற்றும் சிதைவில் தேடவேண்டுமென இந்த எழுத்தாளருக்கு அவரின் முனைவர்பட்ட ஆய்வின் போது வழிகாட்டியது மாபெரும் இஸ்லாமிய அரசியல் அறிஞர் டாக்டர் கலீம் சித்தீகி தான். இஸ்லாத்தைக் குறித்த ஆழ்ந்த ஞானமும் சமூகத்தை வழிநடத்துவதற்கான திறனும் படைத்த பெரும்பாலான முத்தகீ இமாம்களும் அறிஞர்களும் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். மற்றவர்கள் சர்வாதிகார நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கங்களில் இணையுமாறு விலைகொடுத்து வாங்கப்பட்டனர் அல்லது பலவந்தப்படுத்தப்பட்டனர்; அவர்களுக்குப் கொழுத்த ஊதியமும் சலுகைகளும் வழங்கப்பட்டன. சட்டவிரோத ஆட்சியாளர்களை எதிர்க்கத் துணிந்த வெகு சிலரோ, பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் வகையில், விஷமூட்டப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர். வேறு சிலர் நாட்டுப்புறங்களுக்கோ தொலைதூரப் பிரதேசங்களுக்கோ சென்று அமைதியான முறையில் இஸ்லாமிய ஞானத்தைப் பரப்பவும் பிரச்சாரம் செய்யவும் தலைப்பட்டனர். அவர்கள் பற்றியெரிந்து கொண்டிருந்த அரசியல் விவகாரங்களைப் பற்றிப் பேசுவதை தவிர்த்துக்கொண்டு சூஃபியிசத்தை வலியுறுத்தலாயினர். மத்திய ஆசியாவிற்குள்ளும் இந்தோ-பாக் துணைக்கண்டத்திற்குள்ளும் இஸ்லாம் பரவியது இந்த அறிஞர்கள் மற்றும் சூஃபிகள் மூலமாகத் தானேயொழிய சமயம் சாராத மன்னர்கள் மற்றும் படைத் தலைவர்களால் அல்ல. இதற்கு மிக வலுவானதொரு ஆதாரமாக இதைக் கூறலாம்: பிரபலமும் அதிகாரமும் படைத்த மன்னர்கள் மற்றும் படைத்தலைவர்கள் பலரின் அடக்கத்தலங்கள் அனாதரவாக வறண்டு கிடப்பதோடு அவற்றில் தெருநாய்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும் வேளை, அறிஞர்கள் மற்றும் சூஃபிகளின் அடக்கத்தலங்களிலோ பொதுமக்கள் இலட்சக்கணக்கில் மொய்த்த வண்ணமிருக்கின்றனர்.
எனினும், பொதுவாக இந்த அறிஞர்களும் சூஃபிகளும் அரசியலைக் கைவிட்டதன் மூலம் உள்ளார்ந்து இருகூறாக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர்: மன்னர்களும் படைத்தலைவர்களும் ஆட்சியைக் கவனிக்க, இவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதிலும் துன்புற்றிருந்த வெகுமக்களுக்கு ஆன்மிகத்தின் ஊடாக குணமளிப்பதிலும் தமது கவனத்தைக் குவிக்கலாயினர். அரசியல் நீக்கமடைந்த இந்த உலமா மற்றும் சூஃபிகள் தனிப்பட்டளவில் மனிதகுலத்துக்கு மகத்தான சேவைகள் புரிந்தபோதும், அவர்களால் அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாரம், சாதனங்கள் மற்றும் வளங்களுக்கு எவ்விதத்திலும் இணையாக முடியவில்லை. முத்தகீ தலைவர்கள் இருக்கவே செய்தார்களெனினும் அவர்களால் அரசின் தலைவர்களாகச் செயல்பட முடியவில்லை. துன்புறுத்தல்கள் மற்றும் இருகூறாக்கத்தின் பலனாக, காலவோட்டத்தில் இத்தகைய முத்தகீ தலைவர்களின் தரமும் எண்ணிக்கையும் கூட குறையவாரம்பித்தது. இவ்வாறு வலுவிழந்திருந்த ஓர் இஸ்லாமிய சமூகத்தால் மேம்பட்ட அறிவியல் அறிவையும், சிறந்த அமைப்புரீதியான ஒருங்கிணைப்புத் திறனையும்; சாகசம், பேரார்வம், பேராசை, பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான நாட்டம் ஆகியவற்றால் நிரம்பிய ஓர் ஊக்கவுணர்வையும் கொண்டிருந்த ஐரோப்பியர்களின் தாக்குதலுக்கு ஒரு வினைத்திறன்மிக்க நடைமுறை எதிர்வினையை ஆற்ற முடியவில்லை.
பாகம் 2-ல் தொடரும்…