Monday, March 5, 2018

நீட்- வரலாறும் புவியியலும்

Rajagopal Subramaniam
Via facebook
2018-03-05

நீட்- வரலாறும் புவியியலும்

தமிழ்நாட்டில் நீட் ஆதரவாளர்கள் எனப்படுபவர்கள் தொடர்ச்சியாக சொல்லி வருவது மூன்று விஷயங்கள் தான்.

1. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலானது. நாம் சட்டத்தின் மாட்சிமையை மதிக்க வேண்டும்

2. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பது. எனவே மத்திய அரசின் சட்டம் மாநில அரசின் சட்டத்துடன் முரண்பட்டால் மத்திய அரசின் சட்டமே செல்லும்.

3. நீட் பாடத்திட்டத்தை முடிவு செய்வது சிபிஎஸ்ஈ அல்ல. மருத்துவ கவுன்சில் தான். பாடத்திட்டத்தை 2௦1௦-லேயே மருத்துவ கவுன்சில் வெளியிட்டு விட்டது. எனவே பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காதது நமது தவறு.

மூன்றுமே முழு உண்மைகள் அல்ல. இது போன்று தொடர்ச்சியாக செய்யும் பரப்புரைகளை நீட் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். எனவே இது குறித்து விளக்கமாக ஆராய வேண்டியது அவசியமாகிறது.

நீட் எனப்படும் மருத்துவ கல்விக்கான இந்தியா முழுமைக்குமான ஒரே தேர்வு என்ற பிரச்சினை 2010-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகள் (Regulations) மூலம் தான் முதலில் ஆரம்பித்தது. இதனால் பாதிக்கப்பட்டது அதிகம் தமிழ்நாடு தான் என்றாலும், பிற மாநிலங்களும் பாதிக்கப்பட்டன. பல்வேறு மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் நடத்தி வரும் மத, மொழி சிறுபான்மையினரும், மகாராஷ்டிரா, கர்னாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்கள் அரசுக்கல்லூரிகளின் இடங்களுக்காக தங்களுக்கென தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி வந்தன. எனவே நாடெங்கும் உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றல்ல, இரண்டல்ல, 115 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவும் அடங்கும். இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது. (Christian Medical College Vellore & Others Vs Union of India). மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள், அரசியலமைப்புச்சட்டத்தின் 19(1)(g), 25, 26, 29(1) 3௦(1)- பிரிவுகளுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. சிறுபான்மையினர் வைத்த வாதம் சுவாரஸ்யமானது. கிறித்தவ மத நம்பிக்கைகளின் படி இயேசுவின் போதனைகளில் ஒன்று நோயுற்றவர்களை குணப்படுத்த வேண்டும் என்பது. அந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு மருத்துவர்களும் செவிலியர்களும் உருவாக்கப்படுகிறார்கள். இந்த நிறுவனங்களில் சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்தே அனுமதிக்கப்படுகிறார்கள். மாணவர்களை அனுமதிப்பது என்பது அந்நிறுவனங்களின் நிர்வாக உரிமை. எனவே, இந்நிறுவனங்களின் நிர்வாக உள்விவகாரங்களில் அரசு உட்பட வேறு யாரும் தலையிட முடியாது என்று எடுத்தியம்பி வாதிடப்பட்டது.

சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து தெளிவாகவும், விளக்கமாகவும் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்த T.M.A.Pai Foundation & Ors vs State Of Karnataka & Ors வழக்கு முக்கியமான ஒன்றாகும். இந்த தீர்ப்பின் பல்வேறு அம்சங்களை மருத்துவ கவுன்சில் வெளியிட்ட விதிமுறைகள் மீறுகின்றன என்பதும் முக்கியமான வாதம். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை தனது வாதங்களை கீழ்கண்டவாறு சுருக்கிக்கொண்டது.

மருத்துவ கவுன்சிலின் விதிகள் மத்திய அரசால் இயற்றப்பட்ட முதன்மையான சட்டம் கிடையாது, மாறாக தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பின் விதிகள் தான். மருத்துவ கவுன்சில் இயற்றிய விதிமுறைகள் மத்திய அரசின் பட்டியலில் உள்ள Entry 66- List I- Coordination and determination of standards கீழ் இருந்தாலும், தமிழ்நாடு அரசு நுழைவுத்தேர்வை ரத்து செய்து இயற்றிய ‘முதன்மையான சட்டத்தை’ (Plenary legislation ) மத்திய அரசு தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பிற்கு அளித்த அதிகாரத்தை ஒட்டி இயற்றப்பட்ட விதிமுறைகள் (subordinate legislation) கட்டுப்படுத்தாது என்று வாதிட்டது.

இந்த வாதங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மருத்துவ கவுன்சிலுக்கு நாடு முழுவதுக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு இயற்றும் அதிகாரம் இல்லை என்றும் அவ்விதிமுறைகள் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது திட்டவட்டமாக தீர்ப்பளித்துவிட்டது. மருத்துவ கவுன்சில் மருத்துவ கல்வியின் தர நிர்ணயத்திற்கு நுழைவுத்தேர்வு அவசியம் என்று வாதிட்டதையும் நிராகரித்து விட்டது. தகுதி பற்றி நமது ஆட்களின் வாதம் குறித்து சொல்லியது மட்டும் கீழே.

The desire to give due recognition
to merit is laudable, but the pragmatic realities on the
ground relating to health care, especially in the rural
and tribal areas where a large section of the Indian
population resides, have also to be kept in mind when
policy decisions are taken in matters such as this.
While the country certainly needs brilliant doctors and
surgeons and specialists and other connected with health
care, who are equal to any in other parts of the world,
considering ground realities, the country also has need
for "barefoot doctors", who are committed and are
available to provide medical services and health care
facilities in different areas as part of their mission in
becoming doctors.

இந்த தீர்ப்பு வந்தது ஜூலை 2௦13. மூன்று நீதிபதிகள் அடங்கிய இந்த அமர்வில் ஒருவர் மட்டும் (அனில் தவே) இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் வேறுபட்ட தீர்ப்பை (dissenting view) அளிக்கிறார்.
பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கிடையில் இந்த தீர்ப்பை அளித்தவர்களில் ஒருவரான தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் ஓய்வு பெற்று விடுகிறார். பிறகு வேறு வேறு அமர்வுகளுக்கு மாற்றப்பட்டு இறுதியாக இதே போன்ற பிரச்சினையை விசாரிக்கும் ஒரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருப்பதால் இந்த சீராய்வு மனுவும் அந்த அரசமைப்புச்சட்ட அமர்விற்கு மாற்றப்படுகிறது. அந்த அரசமைப்புச்சட்ட அமர்வு சீராய்வு ஏப்ரல் 11, 2௦16-ல் மனுவினை அனுமதிக்கிறது.

அதற்கான காரணங்கள் மேற்கண்ட நுழைவுத்தேர்வை எதிர்த்து வழங்கப்பட்ட தீர்ப்பு சில முக்கியமான முன்தீர்ப்புகளை கவனிக்க தவறி விட்டது, மேலும் அந்த அமர்வில் இருந்த நீதிபதிகள் விவாதிப்பதற்கு நேரம் இல்லை (அல்தாமஸ் கபீர் ஓய்வு பெறுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது). இதில் சட்ட ரீதியாக சில சிக்கல்கள் இருக்கின்றன, அதை எழுதினால் பதிவின் நீளம் அதிகமாகும். எனவே, இதை சட்டப்படி சரி என்றே வைத்துக்கொண்டாலும், சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட பிறகு 2௦13ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு திரும்பப் பெற மட்டுமே செய்யப்படுகிறது. (recall).
விளைவாக இந்த தீர்ப்புக்கு முன்பிருந்த நிலை வந்து விடுகிறது, அதாவது மருத்துவ கவுன்சில் வெளியிட்ட விதிமுறைகள் செல்லும் என்ற நிலை வந்து விடுகிறது.

சீராய்வு மனு அனுமதிக்கப்பட்ட தேதி ஏப்ரல் 11, 2016. உடனே, சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு பொது நல வழக்கு தாக்கல் செய்கிறது. இருபது நாட்களுக்குள்ளாகவே உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 28, 2016-ம் தேதியே நாடு முழுவதும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடுகிறது.

மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளை எதிர்த்து வாதிட்ட 115 பேருக்கும் இந்த பொது நல வழக்கில் எதிர்ப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை விட முக்கியமான விஷயம், இந்த சீராய்வு மனுவின் தீர்ப்பின் படி புதிதாக ஒரு அமர்வு வழக்கினை முதலிலிருந்து திரும்ப விரிவாக விசாரிக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு அமர்வு இன்னமும் உருவாக்கப்படவேயில்லை!

விரிவாக விவாதிக்கப்பட்டு வழங்கிய ஒரு தீர்ப்பை ஒரு பக்க தீர்ப்பின் மூலம் முடக்கி விட்டார்கள். ஒரு நீதிமன்ற தீர்ப்பை ஓவர் ரூல் செய்வதற்கு அந்த தீர்ப்பு எவ்வாறு தவறானது என்று அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுவ வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் இன்று வரை அதை செய்யவேயில்லை. அதற்கு முன்பே அவசரம் அவசரமாக இந்த தேர்வுகளை நடத்துவது சரியா என்று தெரியவில்லை. இந்த அமர்வு பின்பு அமைக்கப்பட்டு முழுமையாக விசாரித்து அந்த அமர்வும் நீட் தேர்வு தேவையில்லை என்று உத்தரவிட்டால் என்னவாகும்?

பல்வேறு முன்தீர்ப்புகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து வழங்கிய 2௦13-ம் ஆண்டு தீர்ப்பில் நீட் தேர்வு அவசியம் என்று மாறுபட்ட தீர்ப்பை அளித்த அனில் தவே தான் 2௦16-ல் சீராய்வு மனுவை அனுமதித்த அமர்விலும், திரும்பவும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பொது நல வழக்கிலும் மூத்த நீதிபதியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இன்றைய நிலைக்கு இவரே காரணம் என்றால் அது மிகையல்ல. எனவே, இவரை பற்றி நாம் அறிந்து கொள்வது முக்கியம்.
இவர் குஜராத்தை சேர்ந்தவர். குஜராத் அரசின் அரசு வழக்கறிஞராக இருந்தவர். மனைவி கணவனை பெற்றோரை விட்டு வர சொல்வது ‘குரூரம்’ என்றும் விவாகரத்திற்கு அதை ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தவர். குரு சிஷ்ய பரம்பரையின் அழிவு தான் நாட்டின் வன்முறைக்கு காரணம் என்றும் பகவத் கீதையை நாடு முழுவதும் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்றும் ஒரு செமினாரில் கூறியவர். தூக்கு தண்டனைக்கு எதிரான யாகூப் மேனனின் கடைசி கட்ட மனுவில் அவரது வழக்கறிஞர் வாழ்வா சாவா பிரச்சினையில் அரசின் முடிவை விமர்சித்து யாக்குப் மேனன் துயரத்தை அனுபவிக்கிறார் என்று சொன்ன போது அவரது துயர் முடியட்டும் என்று ‘கருணை’யுடன் சொன்னவர்.
இப்போது உங்களுக்கு 'சட்டப்படி' தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்பதில் உள்ள உண்மை புரிந்திருக்கும் என்பதால் நான் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

2௦1௦-லியே மருத்துவ கவுன்சில் நீட் பாடத்திட்டத்தை அறிவித்து விட்டது, நாம் தான் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வில்லை என்று குற்றம் சொல்பவர்கள் 2௦16-ம் ஆண்டு வரை நீட் தேர்விற்கு தடை இருந்தது என்பதை சொல்ல மாட்டார்கள். நீட் தேர்விற்கு விலக்களிக்க கோரும் தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகள் அனுமதி அளிக்காததை சொல்ல மாட்டார்கள், மாறாக குடியரசுத்தலைவரிடம் நிலுவையில் இருப்பதாக திரிப்பார்கள்.

நீட் தேர்வு இருந்தால் யார் பயனடைவார்கள், யார் பாதிப்படைவார்கள் என்று தமிழக மக்கள் அறிவார்கள். ஆனால், பெரும்பான்மையாக பாதிக்கப்படும் சாமான்ய மக்களுக்காக நிற்காமல் பயனடையும் சிறுபான்மையினருக்காக சட்டம், தகுதி, தரம், குடியரசுத்தலைவர் அனுமதி இல்லை என்று மக்களை திசை திருப்புவர்களையும் மக்கள் அறிவார்கள்.

#TNAgainstNEET #HBDDrAnitha

https://m.facebook.com/story.php?story_fbid=10213428734865895&id=1625704159

No comments:

Post a Comment